3.36 கி.மீ.,யில் கட்டப்பட்டுள்ள ஈரடுக்கு மேம்பாலம் பெங்களூரில் திறப்புக்காக காத்திருக்கும் வாகன ஓட்டிகள்
3.36 கி.மீ.,யில் கட்டப்பட்டுள்ள ஈரடுக்கு மேம்பாலம் பெங்களூரில் திறப்புக்காக காத்திருக்கும் வாகன ஓட்டிகள்
ADDED : ஜூலை 09, 2024 04:46 AM

கர்நாடகாவின் தலைநகரான பெங்களூரு, இன்று உலக அளவில் அதிவேகமாக வளர்ந்து வருகிறது. 'தகவல் தொழில்நுட்ப நகரம், பூங்கா நகரம்' என பல்வேறு சிறப்பு பெயர்களால் பெங்களூரு அழைக்கப்பட்டு வருகிறது.
தற்போது பெங்களூரில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில், நாட்டின் அனைத்து மாநிலத்தவர், வெளிநாட்டினர் வேலை செய்து வருகின்றனர். இதனால், தங்கள் குடும்பத்தினருடன் இங்கே வசித்தும் வருகின்றனர்.
பெங்களூரு நகருக்கு பன்மொழி பேசுவோரை தாங்கும் நகரம் என்றும் பெயர் உண்டு. இந்த ஆண்டு நிலவரப்படி, பெங்களூரில் ஒரு கோடியே 40 லட்சத்து 8,000 பேர் வசித்து வருகின்றனர். மக்கள் தொகைக்கு ஏற்ப வாகனங்களின் எண்ணிக்கையும், நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்கிறது.
இதனால், பெங்களூரு நகரில் உள்ள அனைத்து சாலைகளிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. காலையில், வேலைக்கு செல்வோரும், மாலையில், வேலை முடிந்து வீட்டுக்கு செல்வோரும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி நொந்து நுாலாகி தான், வீட்டிற்கு சென்றடைகின்றனர்.
* சமூக வலைதளங்கள்
பெங்களூரில் நிலவும் போக்குவரத்து நெரிசலால் 10 நிமிடங்களில் செல்லக்கூடிய இடத்திற்கு கூட, வாகனங்களில் செல்ல குறைந்தது 40 நிமிடங்கள் ஆகிறது. அதிகபட்சமாக ஒரு மணி நேரத்திற்கு மேல் கூட ஆகும். பெங்களூரில் நிலவும் போக்குவரத்து நெரிசல் குறித்து, சமூக வலைதளங்களிலும் அதிகம் விவாதிக்கப்பட்டுள்ளது.
ஈஜிபுராவில் நடந்து வரும் மேம்பால பணிகளால், அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும். இந்த போக்குவரத்து நெரிசலின் போது ஒரு இளம்பெண்ணுக்கும், வாலிபருக்கும் ஏற்பட்ட பழக்கம், காதலாகி முடிவில் திருமணமே செய்து கொண்டனர்.
'நாங்கள் திருமணம் செய்து கொண்டோம். ஆனால், இன்னும் மேம்பால பணி முடியவில்லை' என அந்த வாலிபர், சமூக வலைதளத்தில் கிண்டலாக பதிவிட்டிருந்த நிகழ்வும் அரங்கேறி இருந்தது.
போக்குவரத்து நெரிசலில் சிக்கி இளம் பெண் ஒருவர், மொபைல் போனில் அலுவலகத்தில் நடந்த மீட்டிங்கில் பங்கேற்ற வீடியோ பற்றியும், சமூக வலைதளங்களில் அதிகம் விவாதிக்கப்பட்டது.
* அரசு நடவடிக்கை
என்ன தான், பெங்களூரு நகரம் வேகமாக வளர்ந்து வந்தாலும், போக்குவரத்து நெரிசலை குறைக்க அரசுகள் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை என, மக்கள் மனதில் ஒரு எண்ணம் எப்போதும் இருக்கும்.
இந்த எண்ணத்தை, மக்கள் மனதில் இருந்து அகற்றுவதற்காக, போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த, அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. ஆனால், என்ன செய்தாலும் போக்குவரத்து நெரிசல் மட்டும் குறைந்தபாடில்லை.
* மெட்ரோ ரயில்கள்
பெங்களூரு நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், மெட்ரோ ரயில் சேவையும் துவங்கப்பட்டது. தற்போது செல்லகட்டா -- ஒயிட்பீல்டு, நாகசந்திரா- - சில்க் இன்ஸ்டிடியூட் வரை மெட்ரோ ரயில்கள் இயங்கி வருகின்றன. ஆர்.வி.,ரோடு - பொம்மசந்திரா இடையில் மெட்ரோ ரயில் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த பாதையில், டிரைவர் இல்லாத மெட்ரோ ரயில்கள் ஓட இருக்கிறது.
இந்த புதிய ரயில் பாதையில், இன்னொரு அதிசயமும் இருக்கிறது. ராகிகுட்டா- - சென்ட்ரல் சில்க் போர்டு இடையில் 3.36 கி.மீ., துாரத்திற்கு ஈரடுக்கு மேம்பாலம் கட்டப்பட்டு உள்ளது. இதில் கீழ் பாலத்தில் பஸ், கார் உட்பட வாகனங்களும்; மேல் பாலத்தில் மெட்ரோ ரயிலும் இயங்கப்பட உள்ளது. தென் மாநிலங்களில், முதல் முறையாக இந்த ஈரடுக்கு மேம்பாலம் கட்டப்பட்டு உள்ளது.
* எதிர்பார்ப்பு
கடந்த 2017ம் ஆண்டில் ஈரடுக்கு மேம்பாலம் கட்டும் பணிகள் துவங்கின. இந்த பணிகளை பெங்களூரு மெட்ரோ ரயில் நிர்வாகம் மேற்கொண்டது. இதன் மூலம் ராகிகுட்டா- - சென்ட்ரல் சில்க் போர்டு இடையில் போக்குவரத்து நெரிசல் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பாலத்தின் கட்டுமான பணிகள் முடிந்து விட்டன. கடந்த மாதம் 15ம் தேதி முதல் பாலம் பயன்பாட்டிற்கு வரும் என்று கூறப்பட்டிருந்தது. ஆனால் இன்னும் பயன்பாட்டிற்கு வரவில்லை. இதனால், பாலம் எப்போது திறக்கப்படும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
.........
...பாக்ஸ்கள்...
எவ்வளவு செலவு?
ராகிகுட்டா- - சென்ட்ரல் சில்க் போர்டு ஈரடுக்கு மேம்பாலம், மெட்ரோ நிர்வாகம் சார்பில் கட்டப்பட்டுள்ளது. இதுவரை 449 கோடி ரூபாய் செலவு ஆகியுள்ளது. தரை மட்டத்திலிருந்து வாகனங்கள் செல்லும் மேம்பாலம் 8 மீட்டர் உயரத்திலும்; மெட்ரோ ரயில் செல்லும் மேம்பாலம் 16 மீட்டர் உயரத்திலும் அமைக்கப்பட்டுள்ளது.
.......
இணைப்பு சாலைகள்
ஈரடுக்கு மேம்பாலம் ஐந்து பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.
'ஏ' பிரிவு: ராகிகுட்டா -- ஓசூர் ரோட்டை இணைக்கிறது
'பி' பிரிவு: ஹெச்.எஸ்.ஆர்., லே -- அவுட், மடிவாளா மேம்பாலத்தை இணைக்கிறது
'சி' பிரிவு பி.டி.எம்., லே -- அவுட்டில் இருந்து ஓசூர் ரோடு, ஹெச்.எஸ்.ஆர்., லே -- அவுட்டை இணைக்கிறது
'டி' பிரிவு ஹெச்.எஸ்.ஆர்., லே -- அவுட்டையும், ராகிகுட்டாவையும் இணைக்கிறது
'இ' பிரிவு ஹெச்.எஸ்.ஆர்., லே -- அவுடடையும், - பி.டி.எம்., லே -- அவுட்டையும் இணைக்கிறது.
.....
சிக்னல் இல்லாத சாலை
ராகிகுட்டா -- சென்ட்ரல் சில்க் போர்டு இடையில் ஈரடுக்கு மேம்பால சாலையில் சிக்னல்கள் இல்லை. இதனால் இரு இடங்களையும் ஐந்து முதல் பத்து நிமிடங்களில் கடந்து விடலாம். மூன்று இடங்களில், 'யு- டர்ன்' அமைக்கப்பட்டுள்ளது.
.....
46,000 வாகனங்கள்
போக்குவரத்து போலீசார் நடத்திய ஆய்வில், ராகிகுட்டா -- சென்ட்ரல் சில்க் போர்டு இடையில் காலை 6:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை தினமும் 46,000 வாகனங்கள் செல்வதாக தெரியவந்துள்ளது. இந்த சாலையில், சென்ட்ரல் சில்க் போர்டில் அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதும் கண்டறியப்பட்டது.
......
இரவில் தடை?
ஈரடுக்கு மேம்பாலம் பயன்பாட்டுக்கு வந்த பின்னர், விபத்தை தடுக்கும் நோக்கில் இரவு நேரத்தில் மேம்பாலத்தில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்படும் என அதிகாரிகள் கூறி வருகின்றனர். ஆனால், இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. காலை 5:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை மட்டுமே வாகனங்களுக்கு அனுமதி வழங்கப்படலாம்.
.....
பல சவால்கள்
மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மக்கள் தொடர்பு அதிகாரி யஷ்வந்த் சவன் கூறுகையில், ''சில்க் போர்டு சந்திப்பை சிக்னல் இல்லாத இடமாக மாற்றும் நோக்கில், இந்த மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. அதிக போக்குவரத்து நெரிசல் காரணமாக, 'டி மற்றும் 'இ' பிரிவுகளை அமைப்பது சவாலாக இருந்தது,'' என்றார்.
...
மத்திய அரசுக்கு கடிதம்
ராகிகுட்டா -- சென்ட்ரல் சில்க் போர்டு ஈரடுக்கு மேம்பால பணிகள் முடிந்து விட்டன. இந்த பாலம் திறக்கப்படும் தேதியை அதிகாரிகள் தள்ளி போடுகின்றனர். இதனால் வாகன ஓட்டிகள் கோபத்திற்கு ஆளாகியுள்ளனர்.
பெங்களூரு மெட்ரோ நிறுவனம், மத்திய, மாநிலம் என, இரண்டு அரசுகளின் கட்டுப்பாட்டில் வருகிறது. எனவே மேம்பாலத்தை திறந்து வைக்க, இரு அரசுகளிடம் அனுமதி கேட்டு, மெட்ரோ நிறுவன அதிகாரிகள் கடிதம் எழுதி உள்ளனர். பதில் கிடைத்தவுடன் பாலம் திறப்பு தேதி உறுதி செய்யப்படும்.
.......
புல் அவுட்டுகள்...
பெட்ரோல் மிச்சம்
நான், பைக் டாக்சி ஓட்டுகிறேன். சென்ட்ரல் சில்க் போர்டில் இருந்து ராகிகுட்டா செல்ல 30 முதல் 45 நிமிடங்கள் ஆகின்றன. ஈரடுக்கு மேம்பாலம் திறக்கப்பட்டால் ஐந்து நிமிடங்களில் சென்று விடலாம். இதனால் பைக்கின் பெட்ரோல் செலவு குறையும். இந்த பாலத்தை உடனடியாக திறக்க வேண்டும்.
நரேஷ், பொம்மனஹள்ளி
....
போதும் போதும் என்றாகி விடும்
எலக்ட்ரானிக் சிட்டியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறேன். வேலை விஷயமாக அடிக்கடி பி.டி.எம்., லே- - அவுட் சென்று வருவேன். சென்ட்ரல் சில்க் போர்டில் இருந்து ஆரம்பிக்கும் போக்குவரத்து நெரிசலால், பி.டி.எம்., லே- - அவுட் செல்வதற்குள் போதும் போதும் என்றாகி விடும். கூடிய விரைவில் மேம்பாலத்தை திறக்க வேண்டும்.
பிரவீன், எலக்ட்ரானிக் சிட்டி
***
- நமது நிருபர் -