ADDED : ஆக 22, 2024 04:25 AM

கர்நாடகாவின் குடகு, மலைகள், குன்றுகளால் சூழப்பட்ட அற்புதமான மாவட்டமாகும். சுற்றுலா பயணியருக்கு பிடித்தமான இடங்களை பட்டியலிட்டால், குடகு நிச்சயம் இருக்கும். தற்போது மழைக்காலம் என்பதால், பல நாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணியர் குவிகின்றனர்.
குடகு மாவட்டத்தில், ஏராளமான மலைகள் உள்ளன. சில மலைகள் டிரெக்கிங் செய்வதற்கு ஏற்றதாகும். மேலும் சில மலைகள் புராதண பிரசித்தி பெற்ற, பக்தி மணம் கமழும் மலையாகும்.
சாகச பிரியர்களுக்கும், ஆன்மிகவாதிகளுக்கும் பிடித்தமான மலைகள் குடகில் உள்ளன. இவற்றில் பாண்டவர மலையும் அடங்கும்.
குடகு, சோமவாரபேட்டில் இருந்து 7 கி.மீ., தொலைவில் உள்ள ஹொன்னம்மனகெரேவில், பாண்டவர மலை உள்ளது. ஹொன்னம்மனகெரே ஏரி, பெண்களின் தியாகத்தின் அடையாளமாக உள்ளது. ஏரியை சுற்றிலும் மலைகள், குன்றுகள் சூழ்ந்துள்ளன.
அழகான, பசுமையான சூழலில் சிறிது நேரம் பொழுது போக்கினால், மனதுக்கு உல்லாசமாக இருக்கும்.
பெரிய ஏரியில் அலை பாயும் தண்ணீர், உடலை இதமாக வருடி செல்லும் குளிர்ந்த காற்று, நிசப்தத்தை கிழித்து கொண்டு, காதுகளில் மோதும் விலங்குகளின் குரல், பறவைகளின் ரீங்காரம் என, அனைத்தும் நம்மை புதியதொரு உலகுக்கே அழைத்து செல்லும்.
சுற்றிலும் தெரியும் இயற்கையை ரசித்தபடி, ஏரிக்கரையில் நடந்து சென்றால் மன அழுத்தம் மாயமாகி, மனம் லேசாகும். வாழ்நாள் முழுதும் இங்கேயே இருந்துவிடலாமா என்ற எண்ணம் தோன்றாமல் இருக்காது.
ஹொன்னம்மனகெரே ஏரியை சுற்றிலும், பாண்டவரபெட்டா, கவிபெட்டா, ஜேனுகல்லு பெட்டா, மோரிபெட்டா மலைகள் உள்ளன. ஓரளவு கஷ்டப்பட்டு மேலே ஏறி சென்றால் இயற்கையின் ரம்யமான காட்சிகளை ரசிக்கலாம். இந்த மலைகளுக்கும், மஹாபாரதத்துக்கும் தொடர்புள்ளது.
திரோத யுகத்தில் கவுரவர்களின் சூழ்ச்சியால், பகடையில் தோற்ற பாண்டவர்கள், திரவுபதியுடன் வனவாசத்துக்கு சென்றனர். வனவாசத்தின் போது பாண்டவர்கள், இந்த மலைக்கு வந்திருந்தனர்.
சில காலம் தங்கியிருந்ததாக நம்பப்படுகிறது. இதே காரணத்தால் இந்த மலைக்கு, பாண்டவரபெட்டா மலை என்ற பெயர் ஏற்பட்டது. மலையில் 17 குடில்கள் உள்ளன. இவற்றை பாண்டவரே கட்டியதாக கூறப்படுகிறது.
பாண்டவரபெட்டா மலையின், மத்திய பகுதியில் குகை உள்ளது. குகைக்குள் சிறிய குளம் உள்ளது. இதில் உள்ள நீர் தீர்த்தமாக பயன்படுத்தப்படுகிறது.
மலைக்கு செல்ல பாதைகள் உள்ளன. இதில் ஏறி உச்சிக்கு செல்லலாம்; இயற்கையை ரசிக்கலாம். குறிப்பாக துாரத்தில் தெரியும் சூரிய அஸ்தமனத்தை பார்ப்பது, மனதுக்கு உற்சாகத்தை அளிக்கும்.
தொட்டமல்தே உட்பட சுற்றுப் பகுதிகளை ஏழுசாவிரா சீமை என, அழைக்கின்றனர். 1034 முதல் 1297 வரை, இந்த சீமையை செங்கல்தாஸ் என்ற அரச குடும்பத்தினர் ஆண்டனராம். 1106ல் அன்றைய ஏழுசாவிரா சீமைக்கு உட்பட்ட தொட்டமால்தேவில், வியாபாரி கல்லனகேரி மல்லேகவுடா என்பவர் வசித்தார்.
இவரது மருமகள் ஹொன்னம்மா. இவரது உயிர் தியாகத்தால், ஹொன்னம்மனகெரே ஏரி உருவானதாம். எனவே ஏரியை அவரது பெயரில் அழைக்கின்றனர்.
ஹொன்னம்மன ஏரி 16.20 ஏக்கர் பரப்பளவு கொண்டதாகும். இந்த ஏரியில் இருந்து, தொட்டமாள்தே, ஹாரோஹள்ளி, மசகோடு, அப்பூரு, மோரிகல்லு, அடினாடூரு கிராமங்களின் விளை நிலங்களுக்கு தண்ணீர் வினியோகிக்கப்படுகிறது.
ஏரியின் நுழைவாயில் வலது புறத்தில், புராதண காலத்து சித்தேஸ்வரர் கோவில் உள்ளது.
கிழக்கில் முக்கால் கி.மீ., துாரத்தில் பெரிய நந்தி, சிறிய நந்தி விக்ரகங்கள் உள்ளன. ஏரி வளாகத்தில் பசவேஸ்வரா, ஹொன்னம்மா கோவில் உள்ளது.
இதன் அருகிலேயே புஷ்மகிரிதாமா, ஹாரங்கி அணை, துபாரே உட்பட பல்வேறு சுற்றுலா தலங்கள் உள்ளன. பெங்களூரில் இருந்து 250 கி.மீ., துாரத்தில், சோமவாரபேட் உள்ளது.
இங்கிருந்து 7 கி.மீ., தொலைவில் ஹொன்னம்மனகெரே ஏரி உள்ளது. அருகில் ஹோம் ஸ்டேக்கள், ரிசார்ட்டுகள் ஏராளமாக உள்ளன. சுற்றுலா பயணியர் தங்குவற்கு எந்த பிரச்னையும் இருக்காது.
- நமது நிருபர் -