மக்களின் பிச்சை எடுக்கும் பழக்கம்: ம.பி., அமைச்சர் சர்ச்சை பேச்சு
மக்களின் பிச்சை எடுக்கும் பழக்கம்: ம.பி., அமைச்சர் சர்ச்சை பேச்சு
UPDATED : மார் 03, 2025 02:39 AM
ADDED : மார் 03, 2025 01:10 AM

போபால்: “மக்களுக்கு இப்போது பிச்சை எடுக்கும் பழக்கம் வந்து விட்டது. பொதுக்கூட்ட மேடைகளில் தலைவர்களுக்கு மாலை போட்டு, அவர்களின் கைகளில் மனுக்களை கொடுக்கும் தவறான பழக்கத்தை பின்பற்றுகின்றனர்,” என, மத்திய பிரதேச அமைச்சர் பிரஹலாத் படேல் கூறினார்.
மகிழ்ச்சியான வாழ்க்கை
மத்திய பிரதேசத்தில், பா.ஜ.,வைச் சேர்ந்த மோகன் யாதவ் தலைமையிலான அரசு உள்ளது. அங்குள்ள ராஜ்கார் மாவட்டத்தில், சிலை திறப்பு விழாவில் பங்கேற்ற, மாநில கிராமப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரஹலாத் படேல் பேசியதாவது:
மக்களுக்கு இப்போது பிச்சை எடுக்கும் பழக்கம் வந்து விட்டது. எந்த பொது நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி; அதில் பங்கேற்கும் தலைவரிடம், மனுவை கொடுத்து நிறைவேற்ற வலியுறுத்துகின்றனர்.
இது, நல்ல பழக்கமல்ல. பிறரிடம் இருந்து வாங்குவதை விட, கொடுப்பவராகத் தான் இருக்க வேண்டும். அப்படி செய்தால், மகிழ்ச்சியான வாழ்க்கை கிடைக்கும்; நாகரிகமான சமுதாயம் ஏற்படும்.
மக்களுக்கு இலவசங்களை அள்ளிக் கொடுத்து அவர்களை பாழாக்கி விட்டனர். இலவசங்களை கொடுத்தால் சமுதாயத்திற்கு பலம் ஏற்பட வேண்டும். ஆனால், பிச்சைக்காரர்களாக மாற்றி விட்டனர். இலவசங்களை கேட்டு பெறுவது அழகல்ல. வீரன் என்றாவது, பிறரிடம் இருந்து பிச்சை எடுத்தான் என கேள்விப்பட்டுள்ளீர்களா?
நானும் மக்களிடம் பிச்சை எடுத்துள்ளேன். எனக்காக அல்ல. நர்மதா பரிகிரமா பக்தர்களுக்காக கேட்டுள்ளேன். எனக்கு இவ்வளவு பணம் கொடுத்தேன் என்று யாரும் சொல்ல முடியாது. இவ்வாறு அவர் பேசினார்.
கண்டனம்
அமைச்சரின் இந்த பேச்சுக்கு, காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
“பா.ஜ.,வின் அராஜகம் அதிகரித்து விட்டது. என்ன தைரியத்தில் அவர்கள், மக்களை பிச்சைக்காரர்கள் என்கின்றனர்? அன்றாட வாழ்க்கையை ஓட்ட, கடினமாக உழைக்கும் மக்களுக்கு இது அவமானம்.
''விரைவில் பா.ஜ., தலைவர்கள் மக்களிடம் ஓட்டு பிச்சை கேட்டு வருவர். அப்போது அவர்களுக்கு தக்க பாடத்தை கற்பிக்க வேண்டும்,” என, ம.பி., மாநில காங்கிரஸ் தலைவர் ஜீட்டு பட்வாரி கூறினார்.