எம்.பி.பாட்டீல் திடீர் டில்லி பயணம்: கர்நாடக காங்., தலைவர்கள் கலக்கம்
எம்.பி.பாட்டீல் திடீர் டில்லி பயணம்: கர்நாடக காங்., தலைவர்கள் கலக்கம்
ADDED : செப் 10, 2024 11:37 PM

மாநில கனரக தொழில் துறை அமைச்சர் எம்.பி. பாட்டீல் திடீரென டில்லிக்கு பறந்தார். முதல்வர் பதவிக்கு துண்டு போடுவதற்காக அவர் சென்றதாக மாநில காங்., வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.
கடந்த சில மாதங்களாகவே, கர்நாடக முதல்வர் மாற்றம் என்ற பேச்சுதான் காங்கிரஸ் வட்டாரத்தில் ஓடுகிறது. தினமும் யாராவது ஒரு அமைச்சர், முதல்வர் மாற்றம் குறித்து கட்டாயமாக பேசுகிறார். ஆனால், முதல்வர் சித்தராமையா மட்டும் எதுவும் கருத்து தெரிவிக்காமல் உள்ளார்.
சித்தராமையாவுக்கு ஆதரவாக இருக்கும் தலைவர்களோ, தற்போதைக்கு முதல்வர் பதவி காலியாக இல்லை என்று சொல்லி வைக்கின்றனர். ஆனால், மூடா முறைகேடு வழக்கில் சிக்கியுள்ள சித்தராமையா, எப்போது வேண்டுமானாலும் பதவி இழக்க நேரிடும் காங்கிரஸ் தலைவர்களே பேசிக்கொள்கின்றனர்.
இதனால், முதல்வர் பதவியை பெற்றுவிடலாம் என்று திரைமறைவில் பல தலைவர்கள் முயற்சிக்கின்றனர். இந்த நிகழ்வுகளால், சில காங்கிரஸ் எம்.எல்.சி.,க்கள் நொந்து போயுள்ளனர். முதல்வர் பதவி குறித்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும்படி, காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு கடிதம் எழுதினர்.
கர்நாடகாவில் பரபரப்பான அரசியல் சூழ்நிலை நிலவி வரும் நிலையில், துணை முதல்வர் சிவகுமார், குடும்பத்தினருடன் அமெரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். முதல்வர் பதவியை பெறுவதற்கு திட்டம் தீட்டவே, அங்கு சென்றிருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
இதற்கிடையில், மாநில கனரக தொழில்கள் துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல், நேற்று முன்தினம் இரவு, திடீரென டில்லிக்கு பறந்தார். காங்கிரஸ் மேலிட தலைவர்களை சந்தித்து, முதல்வர் பதவிக்கு துண்டு போடலாம் என்று பேசப்படுகிறது.
லிங்காயத் சமுதாய கோட்டாவின் கீழ், இம்முறை வடக்கு மாவட்டத்தைச் சேர்ந்த தனக்கு முதல்வர் பதவி தரும்படி வலியுறுத்துவதற்கு அவர் திட்டமிட்டிருந்தார். ஆனால், தான் அரசு முறை பயணமாக தான் டில்லி வந்துள்ளதாகவும், அரசியல் ரீதியாக அல்ல என்றும் அவர் விளக்கம் அளித்தார்.
ஆனால், அவரது பேச்சை நம்புவதற்கு, கர்நாடக காங்கிரஸ் தலைவர்கள் தயாராக இல்லை. எம்.பி.பாட்டீல் திடீரென டில்லி சென்றிருப்பது காங்கிரஸ் வட்டாரத்தல் கிலியை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில், மூடா முறைகேட்டில், உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை பொறுத்து, கர்நாடகாவில் அரசியல் மாற்றம் நிகழும் வாய்ப்பு உள்ளதாக காங்கிரஸ் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
- நமது நிருபர் -