எம்.பி., சுவாதி மாலிவாலுக்கு மகளிர் ஆணையம் கண்டனம்
எம்.பி., சுவாதி மாலிவாலுக்கு மகளிர் ஆணையம் கண்டனம்
ADDED : ஜூலை 04, 2024 01:59 AM

ஐ.பி., எஸ்டேட்:ஆம் ஆத்மி கட்சியின் ராஜ்யசபா எம்.பி., சுவாதி மாலிவால் குற்றச்சாட்டை டில்லி மகளிர் ஆணையத்தின் இரண்டு உறுப்பினர்கள் மறுத்துள்ளனர்.
முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அவரது கட்சியைச் சேர்ந்த ராஜ்யசபா எம்.பி.,யான சுவாதி மாலிவால் ஒரு கடிதம் எழுதியிருந்தார். அந்த கடிதத்தில், டில்லி மகளிர் ஆணையத்தை ஆம் ஆத்மி அரசு திட்டமிட்டு சேதப்படுத்தி வருவதாக குற்றஞ்சாட்டியிருந்தார்.
இந்த கடிதத்திற்கு பதிலடி கொடுத்து, ஆணையத்தின் உறுப்பினர்களான பிர்தோஸ் கான், கிரண் நேகி ஆகியோர், சுவாதி மாலிவாலுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
அந்த கடிதத்தில், 'மகளிர் ஆணையத்தை உங்களது தனிப்பட்ட அரசியல் ஆதாயங்களுக்காக பயன்படுத்த வேண்டாம்.
'ஆணையத்தின் செயல்பாடுகளுக்கு முதல்வரும் ஆம் ஆத்மி அரசும் பாதுகாப்பு கேடயமாக இருந்து ஊக்குவித்து வருகின்றனர். கற்பனையான குற்றச்சாட்டுகளை கூறுவதை தவிருங்கள்' என, அரவிந்த் கெஜ்ரிவாலின் அரசுக்கு பாராட்டு பத்திரம் வாசித்து, சுவாதி மாலிவாலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.