பா.ஜ.,வுக்கு தாவும் எம்.பி.,க்கள்: நவீன் கட்சியில் போர்க்குரல்
பா.ஜ.,வுக்கு தாவும் எம்.பி.,க்கள்: நவீன் கட்சியில் போர்க்குரல்
ADDED : செப் 09, 2024 03:05 AM

புவனேஸ்வர்:ஒடிசாவில், பிரதான எதிர்க்கட்சியான பிஜு ஜனதா தளத்தின் இரு ராஜ்யசபா எம்.பி.,க்கள் பா.ஜ.,வில் அடுத்தடுத்து இணைந்ததை அடுத்து, “கட்சியில் சுய பரிசோதனை செய்ய வேண்டும்,” என, அக்கட்சியின் மூத்த தலைவர் அமர் சத்பதி தெரிவித்து உள்ளார்.
ஒடிசாவில், முதல்வர் மோகன் சரண் மஜி தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு மே மாதம் நடந்த சட்டசபை தேர்தலில் நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதாதளத்தை வீழ்த்தி, பா.ஜ., ஆட்சி அமைத்தது. இதனால், 24 ஆண்டு கால நவீன் பட்நாயக்கின் ஆட்சி முடிவுக்கு வந்தது.
ஆட்சி மாற்றம் ஏற்பட்டதை அடுத்து, பிஜு ஜனதா தளத்தின் ராஜ்யசபா எம்.பி.,யாக இருந்த மம்தா மோகந்தா, அக்கட்சியில் இருந்து விலகி பா.ஜ.,வில் சேர்ந்தார்.
இதைத் தொடர்ந்து, அக்கட்சியின் மற்றொரு ராஜ்யசபா எம்.பி., சுஜித் குமாரும், பா.ஜ.,வில் இணைந்தார்.
ஒரு மாதத்திற்குள் இரு எம்.பி.,க்கள் பா.ஜ.,வில் அடுத்தடுத்து இணைந்தது, பிஜு ஜனதா தளத்துக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. ஒடிசாவில் மொத்தம் 10 ராஜ்யசபா இடங்கள் உள்ளன.
இதில், பிஜு ஜனதா தளத்துக்கு ஒன்பது எம்.பி.,க்கள் இருந்த நிலையில், பா.ஜ.,வில் இருவர் சேர்ந்ததை அடுத்து ஏழாக குறைந்துள்ளது. 1997ல், பிஜு ஜனதா தளம் துவங்கப்பட்டதில் இருந்து, முதன்முறையாக அக்கட்சிக்கு லோக்சபாவில் எம்.பி., இல்லாத நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், பிஜு ஜனதா தள மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான அமர் சத்பதி நேற்று கூறுகையில், ''கட்சியில் இருந்து சாதாரண உறுப்பினர் வெளியேறினால், அது எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது.
''ஆனால் எம்.பி., விலகினால், அது நிலைமையை மாற்றி விடும். எனவே, நாம் சுயபரிசோதனை செய்து அதற்கேற்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.
பிஜு ஜனதா தளத்தின் ராஜ்யசபா எம்.பி., மனாஸ் மங்கராஜ் கூறுகையில், “மம்தா மோகந்தா, சுஜித் குமார் ஆகியோரின் ராஜினாமா, கட்சியில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது.
''பதவி ஆசைக்காக அவர்கள் பா.ஜ.,வில் சேர்ந்துள்ளனர். நவீன் பட்நாயக்குக்கு அவர்கள் துரோகம் செய்து விட்டனர். அவர்களுக்கு மக்கள் பதிலடி கொடுப்பர்,” என்றார்.