ADDED : செப் 01, 2024 04:48 AM

மைசூரு 'மூடா' விவகாரத்தில் முதல்வர் சித்தராமையா தலைக்கு மேல் கத்தி தொங்கும் நிலையில், மூடா தலைவரின் மனைவி, மைசூரில் 6 கோடி ரூபாய்க்கு வீடு வாங்கியது தெரிய வந்து உள்ளது.
'மூடா' எனும் மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம் சார்பில், பயனாளிகளுக்கு வீட்டு மனை ஒதுக்கியதில் 4,000 கோடி ரூபாய் முறைகேடு நடந்திருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன.
முதல்வர் சித்தராமையா தன் அதிகாரத்தை பயன்படுத்தி, மனைவி பார்வதிக்கு மைசூரின் முக்கிய இடமான விஜயநகரில் 14 வீட்டுமனைகள் வாங்கிக் கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
சமூக ஆர்வலர் ஆபிரகாம் அளித்த புகார் தொடர்பாக, கவர்னர் தாவர்சந்த் கெலாட் அளித்த அனுமதியை எதிர்த்து முதல்வர் சட்டப் போராட்டம் நடத்துகிறார்.
இந்த விவகாரத்தில் தன் தலைக்கு மேல் கத்தி தொங்கும் நிலையில், முதல்வரின் தீவிர ஆதரவாளரும், மூடா தலைவருமான மரிகவுடாவின் மனைவி ஜெயஸ்ரீ, மைசூரு நகரின் தட்டஹள்ளியில் 6 கோடி ரூபாய்க்கு வீடு வாங்கிய விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
ஜெயஸ்ரீ அரசு ஆரம்பப்பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். அவரால் 6 கோடி ரூபாய்க்கு எப்படி வீடு வாங்க முடிந்தது என்று கேள்வி எழுந்துள்ளது.
இது குறித்து மரிகவுடா கூறுகையில், ''என் மனைவி 38 ஆண்டுகள் ஆசிரியையாக இருந்தவர். அவரது பணிக் காலத்தில் சேமித்து வைத்த பணம், வங்கியில் வாங்கிய வீட்டுக் கடன் 55 லட்சம் ரூபாய், விவசாயத்தில் கிடைத்த வருமானத்தில் வீடு வாங்கி உள்ளார்.
''நாங்கள் இருவரும் வருமான வரி செலுத்துகிறோம். என் பெயரில் 10 ஏக்கர்; மனைவி பெயரில் 20 ஏக்கர் நிலங்கள் உள்ளன. அடிப்படையில் நாங்கள் இருவரும் விவசாயிகள். மூடாவில் நடந்த முறைகேடு பற்றி விசாரிக்க தயாராக உள்ளேன். ஆனால், சிலர் என்னை தனிப்பட்ட முறையில் விமர்சிக்கின்றனர்; அவர்களுக்கு பதிலடி கொடுப்பேன்,'' என்றார்.