ADDED : மே 17, 2024 05:45 AM

மனிதர்கள் சிலருக்கு அவர்களின் ஜாதங்களில் ஏதாவது ஒரு தோஷம் இருக்கலாம். அதை சரி செய்ய கோவில்களுக்கு சென்று, பரிகாரம் செய்வர். ஆனால் ஜாதகத்தில் நாக தோஷம் இருக்க கூடாது என்று நினைப்பர். அப்படி ஒரு வேளை இருந்தால், அந்த தோஷத்தை நீக்குவதற்காக நாக கோவில் உள்ளது.
ஜுஞ்சப்பாவின் வயல்
பெங்களூரு - மைசூரு பத்து வழிச்சாலையில் கெங்கேரியில் இருந்து, 5 கிலோ மீட்டர் துாரத்தில் உள்ளது ராமோஹள்ளி கிராமம். இந்த கிராமத்தில் 200 ஆண்டு பழமையான முக்தி நாகர் கோவில் அமைந்து உள்ளது. இந்த கோவில் நாக தேவதைக்கு அர்ப்பணிக்கப்பட்டது. கோவிலுக்குள் 16 அடி உயரம், 36 டன் எடையும் கொண்ட ஒற்றை கல்லில் செதுக்கப்பட்ட நாக சிலை உள்ளது.
கோவில் அமைந்து உள்ள இடத்தை 'ஜுஞ்சப்பாவின் வயல்' என்றும் அழைக்கின்றனர். அதாவது ஜுஞ்சப்பா என்ற விவசாயி நிலத்தில் தான் இந்த கோவில் கட்டப்பட்டு இருக்கிறது. இந்த கோவிலை சுப்பிரமணிய சேவா அறக்கட்டளை நிர்வகித்து வருகிறது.
சர்ப்ப பரிகாரம்
ஒருவரது ஜாதகத்தில் பாம்புகளால் ஏற்படும் தோஷங்களை நீக்க, இங்கு பல்வேறு பூஜைகள் செய்யப்படுகிறது. இதனால் இக்கோவிலுக்கு பக்தர்கள் வருகை அதிகமாக உள்ளது. நாகர பஞ்சமி, விஜய தசமி அன்று கோவிலில் கூட்டம் அலைமோதும். கோவிலில் 108 சிறிய நாக சிலைகள் உள்ளன. சிலைகள் மீது பாலாபிஷேகம் செய்து பக்தர்கள் வழிபடலாம்.
இந்த கோவிலில் ஆசிலேஷா பலி, நாக பிரதிஷ்டை பூஜைகள் செய்யப்படுகிறது. ஆசிலேஷா பலி பூஜை என்பது ஆயில்யம் நட்சத்திரம் உட்பட இதர நட்சத்திரகாரர்களுக்கு நாகதோஷம் இருந்தால், அவர்களுக்கு இத்தகைய பூஜை செய்யப்படுகிறது. பக்தர்களுக்கு கோவிலில் இருந்து பிரசாதம், புனித சாம்பல் கொடுக்கப்படுகிறது.
இது, சில நோய்களை குணப்படுத்தும் சக்தியாக நம்பப்படுகிறது. இந்த கோவில் தினமும் காலை 7:00 மணியில் இருந்து இரவு 7:00 மணி வரை திறந்திருக்கும்.
இந்த கோவில் நிர்வாகத்தை தொடர்பு கொள்ள வேண்டிய, மொபைல் எண் 93412 50664.
- நமது நிருபர் -

