முல்லைப் பெரியாறு அணை விவகாரம் ஓணம் நாளில் காங்., உண்ணாவிரதம்
முல்லைப் பெரியாறு அணை விவகாரம் ஓணம் நாளில் காங்., உண்ணாவிரதம்
ADDED : செப் 14, 2024 02:19 AM
மூணாறு,:முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக திருவோணம் தினமான நாளை (செப்.15) வண்டிபெரியாறில் உண்ணாவிரதம் நடத்த காங்., இடுக்கி மாவட்ட குழு முடிவு செய்தது.
கேரள மாநிலம் வயநாட்டில் ஜூலை 30 கடும் நிலச்சரிவு ஏற்பட்டு 400க்கும் மேற்பட்டோர் பலியாகினர். அச்சம்பவத்திற்கு பிறகு முல்லைப்பெரியாறு அணை விவகாரம் சூடு பிடிக்க துவங்கியுள்ளது.
இடுக்கி மாவட்டத்தில் பல்வேறு கிறிஸ்தவ அமைப்புகள் போராட்டம் நடத்தின. இதற்கிடையே அணை விவகாரத்தை காங்., கையில் எடுத்துள்ளது. அக்கட்சியின் இடுக்கி எம்.பி., டீன்குரியாகோஸ் முல்லைப்பெரியாறில் புதிய அணை கட்ட வேண்டும் என பார்லி.,யில் குரல் எழுப்பினார்.
இந்நிலையில் மாநிலத்தின் முக்கிய பண்டிகையான ஓணம் நாளான நாளை (செப்., 15) வண்டிபெரியாறில் காங்., இடுக்கி மாவட்ட குழு சார்பில் வண்டிபெரியாறில் உண்ணாவிரதம் நடக்கிறது.
இடுக்கி மாவட்ட காங்., தலைவர் மாத்யூ கூறியதாவது: முல்லைப்பெரியாறில் புதிய அணை கட்ட வேண்டும் என்ற போராட்டத்திற்கு தலைமை வகித்த முதல்வர், நீர்வளத்துறை அமைச்சர் ஆகியோரின் செயல் மர்மமாக உள்ளது. அணையின் அச்சுறுத்தலில் இருந்து கேரள மக்களை பாதுகாக்க வலியுறுத்தி மாவட்ட குழு சார்பில் செப்., 15 உண்ணாவிரதம் நடக்கிறது. வண்டி பெரியாறு நகரில் நடக்கும் போராட்டத்தை எம்.பி., டீன் குரியாகோஸ் துவக்கி வைக்கிறார்.
தமிழகத்திற்கு தண்ணீர், கேரளாவுக்கு பாதுகாப்பு என்ற முழக்கத்தை காங்., முன் வைக்கின்றது. முல்லைப்பெரியாறு அணையில் விபத்து ஏற்பட்டால் அது தமிழகத்திற்கு ஈடுகட்ட இயலாத இழப்பு என உணர்த்த வேண்டும். புதிய அணை கட்டி கேரளத்தின் அச்சத்தை போக்க வேண்டும். தமிழகத்திற்கு தண்ணீர் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்பது காங்., கோரிக்கை என்றார்.