பிளாஸ்டிக் பைகளுக்கு அபராதம் மாநகராட்சி கமிஷனர் எச்சரிக்கை
பிளாஸ்டிக் பைகளுக்கு அபராதம் மாநகராட்சி கமிஷனர் எச்சரிக்கை
ADDED : ஜூலை 04, 2024 02:38 AM

பெங்களூரு: ''தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தினால் அபராதம் விதிக்கப்படும்,'' என பெங்களூரு மாநகராட்சி கமிஷனர் துஷார் கிரிநாத் எச்சரித்தார்.
சர்வதேச பிளாஸ்டிக் பையில்லா தினத்தின் ஒரு பகுதியாக, பெங்களூரு கிழக்கு மண்டல ஹெப்பால் பிரிவில் உள்ள முனிரெட்டி பாளையாவில், நேற்று பிளாஸ்டிக் தடை குறித்த விழிப்புணர்வு ஊர்வலத்தை, பெங்களூரு மாநகராட்சி கமிஷனர் துஷார் கிரிநாத் துவக்கி வைத்தார்.
அவர் பேசியதாவது:
நகரம் முழுதும் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் தடை செய்ய வேண்டும். துணிப்பைகள் அல்லது காகித பைகளை மட்டுமே பொது மக்கள், வியாபாரிகள் பயன்படுத்த அறிவுறுத்த வேண்டும்.
எந்தெந்த பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது என்றும்; எந்த பொருளை பயன்படுத்த அனுமதி உள்ளது என்பது குறித்தும் வியாபாரிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். ஜூஸ் விற்பனை செய்பவர்கள், பார்சலுக்கும் பிளாஸ்டிக் கவர், ஸ்டிராக்கள் பயன்படுத்த வேண்டாம்.
அதேவேளையில், வீட்டில் இருந்து பொருட்கள் வாங்க வரும் மக்கள், தங்கள் வீட்டில் இருந்தே பைகளை கொண்டுவர வேண்டும். துணிப்பை அல்லது காகித பைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்கை பயன்படுத்தினால் அபராதம் விதிக்கப்படும். ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும். அதை நாம் ஒன்றிணைந்து தடை செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
பின், தெருவோர வியாபாரிகளுக்கு பிளாஸ்டிக் பை பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து விவரித்தார். பிளாஸ்டிக்கிற்கு பதிலாக, துணி பைகளை வழங்கினார்.