முறிவாலன் கொம்பன் யானையின் உடலில் துப்பாக்கி தோட்டாக்கள் * வனத்துறையினர் விசாரணை
முறிவாலன் கொம்பன் யானையின் உடலில் துப்பாக்கி தோட்டாக்கள் * வனத்துறையினர் விசாரணை
ADDED : செப் 05, 2024 07:45 PM
மூணாறு:கேரள மாநிலம் மூணாறு அருகே சின்னக்கானல் பகுதியில் காட்டு யானை சக்கை கொம்பன் தாக்கி பலியான முறிவாலன் கொம்பனின் உடலில் துப்பாக்கி தோட்டாக்கள் பாய்ந்திருந்தது குறித்து வனத்துறையினர் விசாரிக்கின்றனர்.
சின்னக்கானல் பகுதியில் காட்டு யானைகள் சக்கை கொம்பன் (பலாப்பழம் கொம்பன்) முறிவாலன் கொம்பன் (முறிந்த வால் கொம்பன்) இடையே ஆக., 21ல் மோதல் ஏற்பட்டது. பலத்த காயம் அடைந்த முறிவாலன் கொம்பன் சிகிச்சை பலனின்றி ஆக., 31 நள்ளிரவு இறந்தது. அதன் உடலை வனத்துறை முதன்மை கால்நடை டாக்டர் அருண் சக்கரியா தலைமையில் டாக்டர்கள் சிபி, அருண்குமார், அனுராஜ் ஆகியோர் கொண்ட குழுவினர் பிரேத பரிசோதனை செய்தனர்.
சக்கை கொம்பன் தந்தங்களால் குத்தியதில் முறிவாலன் கொம்பனின் கல்லீரலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. தவிர விலா எலும்புகளும் முறிந்துள்ளன. அவை முறிவாலன் இறப்பதற்கு காரணம் என பிரேத பரிசோதனை முதற்கட்ட தகவலில் தெரியவந்தது.
இந்நிலையில் முறிவாலன் உடலில் 2 முதல் 4 மி.மீ., நீளம் கொண்ட 20 துப்பாக்கி தோட்டாக்கள் கண்டறியப்பட்டுள்ளன. அவை யானையின் உடல் உறுப்புகளை பாதிக்கும் அளவில் இல்லை என வனத்துறையினர் தெரிவித்தனர். இருப்பினும் தோட்டாக்கள் பாய்ந்தது குறித்து வனத்துறையினர் வனவிலங்குகள் பாதுகாப்பு சட்டம் 9 பிரிவுபடி வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.