தேசிய அறிவியல் விருதுகள் வழங்கினார் முர்மு தமிழகத்தின் பத்மநாபனுக்கு 'விஞ்ஞான் ரத்னா'
தேசிய அறிவியல் விருதுகள் வழங்கினார் முர்மு தமிழகத்தின் பத்மநாபனுக்கு 'விஞ்ஞான் ரத்னா'
ADDED : ஆக 23, 2024 12:57 AM

புதுடில்லி, :தமிழகத்தைச் சேர்ந்த பிரபல உயிரி வேதியியல் விஞ்ஞானி கோவிந்தராஜன் பத்மநாபனுக்கு, நாட்டின் உயரிய அறிவியல் விருதான 'விஞ்ஞான் ரத்னா' விருதை ஜனாதிபதி திரவுபதி முர்மு நேற்று வழங்கினார்.
நாட்டில் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்பு துறைகளில் சிறந்து விளங்கும் ஆராய்ச்சியாளர்களுக்கு, பல்வேறு பிரிவுகளில் தேசிய அறிவியல் விருதுகள் வழங்கப்பட்டு வந்தன.
ஐ.ஐ.டி., பேராசிரியர்கள்
இந்த விருதுகள் இனி, 'ராஷ்ட்ரிய விஞ்ஞான் புரஸ்கார்' என்ற பெயரில் நான்கு பிரிவுகளில் வழங்கப்படும் என மத்திய அரசு கடந்த ஜனவரியில் அறிவித்தது.
ஆண்டுதோறும் 56 பேருக்கு இந்த விருதுகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்ட நிலையில், முதல்கட்டமாக 32 பேருக்கும், ஒரு குழுவுக்கும் சமீபத்தில் இந்த விருது அறிவிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, முதல் ராஷ்ட்ரிய விஞ்ஞான் விருதுகளை, ஜனாதிபதி திரவுபதி முர்மு நேற்று டில்லியில் வழங்கினார்.
ஜனாதிபதி மாளிகையில் நடந்த விழாவில் வாழ்நாள் சாதனையாளருக்கான 'விஞ்ஞான் ரத்னா' விருது, தமிழகத்தைச் சேர்ந்த 86 வயதான உயிரி வேதியியல் விஞ்ஞானி கோவிந்தராஜன் பத்மநாபனுக்கு வழங்கப்பட்டது.
தமிழகத்தின் திருச்சியில் உள்ள பாரதிதாசன் பல்கலை பேராசிரியர் லஷ்மணன் முத்துசாமி, கர்நாடகாவின் பெங்களூரில் உள்ள இந்திய வானியற்பியல் கழக இயக்குனர் அன்னபூரணி சுப்ரமணியம், கேரளாவின் திருவனந்தபுரம் சி.எஸ்.ஐ.ஆர்., இயக்குநர் அனந்தராமகிருஷ்ணன் உள்ளிட்ட 13 பேருக்கு, 'விஞ்ஞான் ஸ்ரீ' விருதுகளை ஜனாதிபதி வழங்கினார்.
இளம் வயதில் அறிவியல், தொழில்நுட்ப துறையில் சிறந்து விளங்கியவர்களுக்கு, 'விஞ்ஞான் யுவா - சாந்தி ஸ்வரூப் பட்னாகர்' விருது வழங்கப்பட்டது.
இஸ்ரோ
சென்னை ஐ.ஐ.டி., பேராசிரியர்களான ராதாகிருஷ்ணன் காண்டி, பிரபு ராஜகோபால், மத்திய பிரதேசத்தின் போபாலில் உள்ள இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி கழகத்தின் பேராசிரியர் மகாலட்சுமி ராதாகிருஷ்ணன், ஹைதராபாத், இந்திய நெல் ஆராய்ச்சி கழகத்தைச் சேர்ந்த டாக்டர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட 18 பேர், இந்த விருதை ஜனாதிபதியிடம் இருந்து பெற்றுக் கொண்டனர்.
சிறந்த குழுவுக்கான 'விஞ்ஞான் குழு' விருது, 'சந்திரயான் - 3' திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்திய பெங்களூரில் உள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகத்துக்கு வழங்கப்பட்டது.
இந்த விருதை, சந்திரயான் - 3 திட்ட இயக்குநரும், தமிழகத்தைச் சேர்ந்தவருமான வீரமுத்துவேல் பெற்றுக் கொண்டார். விருது பெற்றவர்கள் அனைவருக்கும் பதக்கமும், ஜனாதிபதி கையெழுத்திட்ட சான்றிதழும் வழங்கப்பட்டன.

