சென்னப்பட்டணா இடைத்தேர்தலில் என் மனைவி போட்டியில்லை: மஞ்சுநாத்
சென்னப்பட்டணா இடைத்தேர்தலில் என் மனைவி போட்டியில்லை: மஞ்சுநாத்
ADDED : ஜூலை 07, 2024 03:05 AM

பெங்களூரு: ''சென்னப்பட்டணா இடைத்தேர்தலில், என் மனைவி அனுசுயா போட்டியிட மாட்டார்,'' என, பா.ஜ.,- - எம்.பி., மஞ்சுநாத் கூறி உள்ளார்.
ராம்நகர் சென்னப்பட்டணா ம.ஜ.த., - எம்.எல்.ஏ.,வாக இருந்தவர் குமாரசாமி. லோக்சபா தேர்தலில் மாண்டியாவில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.பி., ஆனார்.
இதைத் தொடர்ந்து தன் எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்தார். இதனால், சென்னப்பட்டணா தொகுதிக்கு இடைத்தேர்தல் நடக்க உள்ளது.
சென்னப்பட்டணாவில் காங்கிரஸ் வேட்பாளராக யாரை நிறுத்துவது என்பதில் அக்கட்சியில் பெரும் குழப்பம் நிலவுகிறது.
அந்த தொகுதியில், பெண் வேட்பாளரை களம் இறக்குவதற்கு, மாநில காங்கிரஸ் தலைவர் சிவகுமார் திட்டம் வைத்துஉள்ளார்.
இதனால் சுதாரித்துக் கொண்ட பா.ஜ., -- ம.ஜ.த., கூட்டணித் தலைவர்கள், சென்னப்பட்டணாவில் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மகளும், பெங்களூரு ரூரல் பா.ஜ., - எம்.பி., மஞ்சுநாத் மனைவியான அனுசுயாவை களம் இறக்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இந்த விவகாரம் குறித்து, எம்.பி., மஞ்சுநாத், பெங்களூரில் நேற்று அளித்த பேட்டி:
சென்னப்பட்டணா இடைத்தேர்தலில் என் மனைவி அனுசுயா போட்டியிட மாட்டார். அவர் போட்டியிடுவதாக வெளியாகும் தகவல் அனைத்தும் வதந்தி.
இதுபோன்ற தகவல் வெளியாவது, உண்மையில் எங்களுக்கு சங்கடமாக உள்ளது. உண்மைக்கு புறமான தகவல்களை வெளியிட வேண்டாம். சென்னப்பட்டணா தொகுதிக்கு கூட்டணி கட்சி வேட்பாளர் யார் என்பதை, கட்சி மேலிடம் முடிவு செய்யும்.
இவ்வாறு அவர் கூறினார்.