ஹோட்டல்களில் சுத்தமான குடிநீர் ஆய்வுக்கு மைசூரு கலெக்டர் உத்தரவு
ஹோட்டல்களில் சுத்தமான குடிநீர் ஆய்வுக்கு மைசூரு கலெக்டர் உத்தரவு
ADDED : மே 23, 2024 05:00 AM
மைசூரு : மைசூரு நகரின் சாமுண்டீஸ்வரி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட கே.சலுண்டி கிராமத்தில், மாசு கலந்த நீரை குடித்த வாலிபர் ஒருவர் உயிரிழந்தார். 48க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது தொடர்பாக மாவட்ட கலெக்டர் ராஜேந்திரா நேற்று மாவட்டம், தாலுகா துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
அப்போது அவர் கூறியதாவது:
கிராமங்களில் குடிநீர் மாசு ஏற்பட்டால், உடனடியாக அங்கு சென்று ஆய்வு செய்ய வேண்டும். குடிநீர், கழிவுநீர் கால்வாய், சுத்தம் தொடர்பாக, தாசில்தார், செயல் அதிகாரிகள், கிராம நிர்வாக அதிகாரிகள் கிராமத்திற்கு சென்று ஆய்வு செய்ய வேண்டும்.
குடிநீர் தேக்கம், சுத்தம் தொடர்பாக கிராமத்தின் ஒவ்வொரு வீட்டுக்கும் சென்று ஆஷா சுகாதார ஊழியர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
சீதோஷ்ண நிலை காரணமாக பாதிக்கப்படுவோருக்கு சிகிச்சை அளிக்க, ஒவ்வொரு தாலுகா மருத்துவமனைகளிலும் ஐந்து படுக்கைகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
இவ்விஷயத்தில் தனியார் மருத்துவமனைகளில் நோயாளிகள் அனுமதிக்கப்பட்டால், சம்பந்தப்பட்டவர்கள் தாலுகா மருத்துவமனைக்கு தெரிவிக்க வேண்டும்.
ஹோட்டல், சாலையோர பானிபூரி கடைகள், 'பாஸ்ட்புட்' உணவகங்கள் சுத்தமாக இருக்க வேண்டும்.
வாடிக்கையாளர்கள் குடிக்க சுத்தமான மற்றும் வெந்நீர் வைக்கப்பட்டு உள்ளதா என்பதை அடிக்கடி ஆய்வு செய்ய வேண்டும். கிராமப்புற வீடுகளுக்கு குடிநீர் வினியோகிக்கும் போது, சம்பந்தப்பட்ட அதிகாரிகள், குடிநீர் தேக்கம், வினியோகம், நீரின் தரத்தை ஆய்வு செய்ய வேண்டும்.
கிராமப்புறங்களில் குடிநீர் பிரச்னை ஏற்பட்டால், 0821 - 252 6355 என்ற உதவி எண்ணுக்கும்; 0821 - 242 3800, 1077 என்ற கட்டுப்பாட்டு அறைக்கும் தகவல் தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

