மைசூரு அரண்மனை சுற்றுலாவுக்கு 'வாட்ஸாப்'பில் முன்பதிவு
மைசூரு அரண்மனை சுற்றுலாவுக்கு 'வாட்ஸாப்'பில் முன்பதிவு
ADDED : ஆக 15, 2024 04:39 AM

மைசூரு, : 'மைசூரு அரண்மனையை சுற்றிப் பார்க்க வரும் சுற்றுலா பயணியர், டிக்கெட் கவுன்டரில் மணிக்கணக்கில் நிற்கத் தேவையில்லை. வாட்ஸாப் மூலம் முன்பதிவு செய்யலாம்' என, மைசூரு அரண்மனை வாரியம் அறிவித்துள்ளது.
அரண்மனை நகரமான மைசூருக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணியர் வருகின்றனர்.
குறிப்பாக, இங்குள்ள அரண்மனையை பார்க்க வேண்டுமானால், டிக்கெட் கவுன்டரில் டிக்கெட் எடுக்க வேண்டும். இதனால் நீண்ட நேரம் வரிசையில் நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது.
இதைத் தவிர்க்கும் வகையில், பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த இயக்குனரகத்துக்கு உட்பட்ட இ.டி.சி.எஸ்., எனும் குடிமக்கள் சேவைகளின் மின்னணு வினியோக இயக்குனரகம், டிக்கெட் முன்பதிவு திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
தெரிந்த மொழி
இதுதொடர்பாக, மைசூரு அரண்மனை வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கை:
சுற்றுலா பயணியரின் வசதிக்காகவும், அரண்மனையை எளிதாக சுற்றிப் பார்க்கவும், இ.டி.சி.எஸ்., புதிய, 'வாட்ஸாப்' எண் 88841 60088 அறிமுகம் செய்துள்ளது.
இந்த எண்ணிற்கு 'ஹாய்' என கன்னடம் அல்லது ஆங்கிலத்தில் டைப் செய்து அனுப்ப வேண்டும். உங்களுக்கு எந்த மொழியில் தகவல் வேண்டும் என வரும். உங்களுக்கு தெரிந்த மொழியை, 'கிளிக்' செய்ய வேண்டும். அதில், 'புதிய டிக்கெட் பதிவு' மற்றும் 'டிக்கெட் பதிவிறக்கம்' என வரும். புதிய டிக்கெட் முன்பதிவு வந்தால், மீண்டும் எந்த மொழியில் தகவல் வேண்டும் என குறுந்தகவல் வரும்.
நமக்கு தேவையான மொழியை தேர்வு செய்தால், 'புக் நியூ டிக்கெட்' என வரும். அதை கிளிக் செய்தால், இந்தியரா, வெளிநாட்டவரா என கேட்கும். இந்தியர் என குறிப்பிட்டால், டிக்கெட் முன்பதிவு செய்யும் தேதி வரும்.
கட்டணம் எவ்வளவு?
அதைத் தொடர்ந்து, நமது பெயர், எத்தனை பெரியவர்கள், சிறியவர்கள் என்ற தகவல் வரும். அதை நிரப்பினால், ஜி.எஸ்.டி.,யுடன் மொத்த கட்டண தொகை வரும்.
உதாரணமாக, பெரியவர்கள் ஆறு பேர், சிறியவர்கள் நான்கு பேர் என்றால், பெரியவர்களுக்கு 100 ரூபாயும்; சிறியவர்களுக்கு 50 ரூபாயும் வரும்.
அதைத் தொடர்ந்து பணத்தை செலுத்தி, முன்பதிவு செய்த ஐந்து நாட்களுக்குள் அரண்மனையை சுற்றிப்பார்க்கலாம்.
ஐந்து நாட்களுக்கு பின் சென்றால், இந்த முன்பதிவு செல்லுபடியாகாது.
https://mysorepalace.karnataka.gov.in என்ற இணையதளத்தில் சென்று, டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம். தினமும் காலை 10:00 முதல் மாலை 5:30 மணி வரை அரண்மனையை சுற்றிப் பார்க்கலாம்.
இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளது.
படம்: மைசூரு அரண்மனையை சுற்றிப் பார்க்க டிக்கெட் வாங்க அலைமோதும் பயணியர் - கோப்பு படம்