ADDED : செப் 08, 2024 07:00 AM

மைசூரை ஆண்ட மன்னர்கள், தங்களின் ஆட்சிக் காலத்தில் செயல்படுத்திய நல்லத் திட்டங்கள், நற்பணிகள் இன்றைக்கும், மைசூரின் பெருமையை உலகறிய செய்து வருகிறது. குறிப்பாக மைசூரு பட்டுச்சேலைக்கு மயங்காத பெண்களே இல்லை. உலகம் முழுதும் மைசூரு பட்டுச்சேலைக்கு ரசிகைகள் உள்ளனர்.
கர்நாடகாவின் மைசூரு என்றதும், சட்டென நம் நினைவுக்கு வருவது தசரா. இது போன்று பல உற்பத்தி பொருட்கள், இன்றளவும், தன் மகத்துவத்தையும், செல்வாக்கையும், சிறப்பையும் தக்கவைத்திருப்பது பெருமையான விஷயமாகும்.
மைசூரு மல்லிகை, மைசூரு பாக், மைசூரு பட்டுச்சேலை கர்நாடகாவின் பாரம்பரியத்தை உணர்த்துகிறது. ஆண்டு முழுதும் உலகின் பல நாடுகளில் இருந்தும், சுற்றுலா பயணியர் வருகின்றனர்.
ஊரை சுற்றிப்பார்த்து, மைசூரு பாக் ருசித்து, மல்லிகையை சூடிக் கொண்டு மைசூரு பட்டுச்சேலை வாங்கிக்கொண்டு, மன மகிழ்ச்சியுடன் ஊருக்கு திரும்புகின்றனர்.
மவுசு
பொதுவாக தொலைவில் இருந்து, மைசூரு வரும் சுற்றுலா பயணியர், மைசூரு பட்டுச்சேலை வாங்க வேண்டும் என்ற ஆசையுடன் வருவதை பார்க்கலாம்.
அந்த அளவுக்கு மைசூரு பட்டுச்சேலைக்கு பெண்கள் இடையே உள்ளது. அவர்கள் மனதில் இடம் பிடித்துள்ளது.
வாழ்க்கையில் ஒரு முறையாவது, மைசூரு பட்டுச்சேலையை அணிய வேண்டும் என, விரும்புவர்.
மைசூரு பட்டுச்சேலை சிறப்பான முறையில் உற்பத்தி செய்யப்படுகிறது. மற்ற சேலைகளுடன் ஒப்பிட்டால், மைசூரு பட்டுச்சேலையின் ஜரிகை, டிசைன், தரம் மாறுபட்டதாக இருக்கும். திறன் வாய்ந்த நெசவாளர்கள் உற்பத்தி செய்கின்றனர்.
இதை உடுத்தினால், உடலுக்கு சுமையாக இருக்காது. மெல்லியதாக இருக்கும். தோற்றத்தை அழகாக காண்பிக்கும். நாமே கசக்கினாலும், சுருங்காது. புத்தம் புதிதாகவே தென்படும். இஸ்திரி செய்ய வேண்டிய அவசியமே இருக்காது.
ஜரிகை மங்கலாகாது. பல ஆண்டுகள் ஆனாலும், அப்படியே இருக்கும். இதனால், பெண்கள் மைசூரு பட்டுச்சேலையை விரும்புகின்றனர். ஜரி பிரின்டெட் சேலை, சிறிய மாங்காய் டிசைன் சேலை, டிஷ்யூ, புட்டா சேலை என, 115 வகையான 300க்கும் மேற்பட்ட வர்ணங்கள் கொண்ட சேலைகள் கிடைக்கின்றன.
விற்பனை கடைகள்
இது போன்ற பல சிறப்புகளால், பெண்களை சுண்டி இழுக்கிறது. தொலைவில் இருந்து வரும் மக்கள், மைசூரு பட்டு பெயரில், மோசம் போவதை தடுக்கும் நோக்கில், மைசூரின் ஜே.எல்.பி., ரோடு, நீலகிரி ரோடு, மிருகக்காட்சி சாலை உட்பட, பல்வேறு இடங்களில் மைசூரு பட்டுச்சேலை விற்பனை கடைகள் திறக்கப்பட்டுள்ளன.
அது மட்டுமல்ல, மானந்தவாடி ரோட்டில் உள்ள, பட்டுச்சேலை தொழிற்சாலைக்கு நேரில் சென்று, தங்களுக்கு பிடித்தமான சேலைகளை வாங்கவும், அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மைசூருக்கு ஆண்டு முழுதும் சுற்றுலா பயணியர் வருகின்றனர் என்றாலும், தசரா நேரத்தில் லட்சக்கணக்கானோர் வருகை தருவர். அனைத்து இடங்களையும் பார்த்துவிட்டு, மைசூரு பட்டுச்சேலை வாங்குவது வழக்கம்.
சேலையின் ஜரிகை, வடிவம் அதன் சிறப்புகளை பொருத்து, விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு லட்சம் ரூபாய் வரை விலை உள்ளது. அவரவர் வசதிக்கேற்ப சேலை வாங்குவர். திருமணங்களுக்கு மொத்தமாக சேலை வாங்குவது வழக்கம்.
இவ்வளவு சிறப்பு கொண்ட, மைசூரு பட்டுச்சேலை தயாரிக்கும் தொழிற்சாலை எப்போது ஆரம்பமானது என்பதை, கூறியே ஆக வேண்டும்.
இன்று நாம் பெருமைப்படும் மைசூரு பட்டுச்சேலை தயாரிப்பு தொழிற்சாலை, நால்வடி கிருஷ்ண ராஜ உடையார் காலத்தில் உருவாக்கப்பட்டது. 1912ல் பிரிட்டனில் நடந்த ராணி விக்டோரியா பட்டாபிஷேக பொன் விழா நிகழச்சிக்கு, மைசூர் மன்னர் நால்வடி கிருஷ்ணராஜ உடையார் சென்றிருந்தார்.
சுவிட்சர்லாந்த்
அப்போது பிரிட்டீஷ் அரச குடும்பத்தினர் அணிந்திருந்த, இயந்திரத்தால் தயாரிக்கப்பட்ட பட்டு உடைகள், நால்வடி கிருஷ்ணராஜ உடையாரின் கவனத்தை ஈர்த்தது.
இதை மைசூரில் ஏன் தயாரிக்க கூடாது என்ற எண்ணம், அவருக்கு ஏற்பட்டது. இது குறித்து தகவல் கேட்டறிந்தார். சுவிட்சர்லாந்தில் இருந்து 32 மின் விசை இயந்திரங்களை, மைசூருக்கு வரவழைத்தார். மைசூரின், மானந்தவாடி ரோட்டில் பட்டுச்சேலை தயாரிப்பு தொழிற்சாலையை துவக்கினார். இது இந்தியாவின், முதல் பட்டு உற்பத்தி தொழிற்சாலை என்பது குறிப்பிடத்தக்கது.
அன்று முதல், இன்று வரை இந்த தொழிற்சாலையில், பலவிதமான பட்டுச்சேலைகள் தயாரிக்கப்படுகின்றன. தன் சிறப்பை தக்க வைத்துள்ளன. இதற்கு முக்கிய காரணம், இந்த சேலைகள் கலப்படம் இல்லாத, சுத்தமான பட்டாகும்.
தங்க ஜரிகை கலந்ததாகும். இப்போது 'கர்நாடக சில்க் இண்டஸ்ட்ரீஸ் கார்ப்பரேஷன்' ஆக, அரசு கட்டுப்பாட்டில் செயல்படுகிறது.
மைசூரு மாநிலத்தில், முதன் முதலில் பட்டு அறிமுகம் செய்தது, திப்பு சுல்தான் என்றாலும், பட்டு தொழிலுக்கு அங்கீகாரம் அளித்து, உலகம் முழுதும் பிரபலமாக்கியது நால்வடி கிருஷ்ண ராஜ உடையார் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்றைக்கும் பெண்கள், மைசூரு பட்டுச்சேலை அணிந்து, திருமணம் போன்ற முக்கிய நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை, கவுரவமாக கருதுகின்றனர். மைசூரு பட்டுச்சேலை நம் கர்நாடக சம்பிரதாயம், பாரம்பரியத்தின் அடையாளம்
. - நமது நிருபர் -