பஸ்சில் பழம், மயக்க ஜூஸ் கொடுத்து தங்க செயினை பறித்த மர்ம நபர்கள்
பஸ்சில் பழம், மயக்க ஜூஸ் கொடுத்து தங்க செயினை பறித்த மர்ம நபர்கள்
ADDED : மே 22, 2024 10:53 PM

பெலகாவி: ரயிலில் செல்லும் போது, பயணி போன்று பயணித்து, தாங்கள் வைத்துள்ள மயக்க மருந்து பிஸ்கட்டை, மற்ற பயணிக்கு கொடுப்பர்.
அதை சாப்பிடுபவர்கள் சிறிது நேரத்தில் மயக்கம் அடைந்து விடுவர். இந்நேரத்தில், அவர்கள் அணிந்திருக்கும் தங்க நகைகள், பர்ஸ், பணத்தை திருடர்கள் கொள்ளை அடித்து செல்வர்.
தற்போது இதே 'பார்முலா'வை, பஸ்சிலும் செயல்படுத்த துவக்கி உள்ளனர். ஹூப்பள்ளியில் இருந்து பெலகாவிக்கு நேற்று முன்தினம் இரவு 7:30 மணிக்கு கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ் சென்று கொண்டிருந்தது. இதில், சஞ்சீவ், சுரேஷ் ஆகியோர் பயணித்தனர்.
இவர்களின் அருகில் இருந்த மர்ம நபர், இவர்களிடம் பேச்சு கொண்டே வந்தார். சிறிது துாரம் சென்ற பின், மர்ம நபர் வாழைப்பழம், பழச்சாறு கொடுத்துள்ளார். சஞ்சீவ், சுரேஷ் அதை வாங்கி சாப்பிட்டனர்.
சிறிது நேரத்தில் இருவரும் மயக்கமடைந்து விட்டனர். அப்போது மர்ம நபர், இருவரிடம் இருந்து தங்க செயின், பை, பர்ஸ் ஆகியவற்றை திருடி சென்றுவிட்டார். சுரேஷ் கண் விழித்து பார்த்த போது, தங்க செயின், பை, பர்ஸ் காணாமல் போனது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
நண்பர் சஞ்சீவ் இன்னும் மயக்க நிலையில் இருந்தார். உடனடியாக பஸ்சை நிறுத்த சொன்ன சுரேஷ், நடந்த சம்பவத்தை கூறினார். சஞ்சீவ், பெலகாவியில் உள்ள பிம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இது தொடர்பாக சுரேஷ் கொடுத்த புகாரின்படி, போலீசார் விசாரிக்கின்றனர்.

