கர்நாடக முதல்வரை எதிர்த்து மைசூரு பாதயாத்திரை துவக்கம்
கர்நாடக முதல்வரை எதிர்த்து மைசூரு பாதயாத்திரை துவக்கம்
ADDED : ஆக 04, 2024 12:45 AM

பெங்களூரு: 'மூடா' முறைகேடு வழக்கில் முதல்வர் சித்தராமையாவை ராஜினாமா செய்ய வலியுறுத்தி, பெங்களூரில் இருந்து மைசூரு வரையிலான பாதயாத்திரையை, பா.ஜ., - ம.ஜ.த.,வினர் நேற்று துவக்கினர்.
கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இவரது மனைவி பார்வதிக்கு, 'மூடா' எனும் மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம் 14 மனைகளை ஒதுக்கியது.
சமூக ஆர்வலர் அளித்த புகாரின் அடிப்படையில் விளக்கம் கேட்டு முதல்வருக்கு, கவர்னர் நோட்டீஸ் அனுப்பினார். இந்த நோட்டீசை திரும்பப் பெறும்படி கர்நாடக அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில் மூடா முறைகேட்டுக்கு பொறுப்பேற்று, முதல்வர் பதவியை சித்தராமையா ராஜினாமா செய்ய வலியுறுத்தி, பா.ஜ., - ம.ஜ.த.,வினர் மைசூரு வரை பாதயாத்திரை செல்ல முடிவு செய்தனர்.
இதன்படி, பெங்களூரு கெம்பம்மா கோவிலில் இரு கட்சித் தலைவர்களும் நேற்று காலை பூஜை செய்தனர். பின், அங்கு அமைக்கப்பட்டிருந்த பிரமாண்டமான மேடையில், பா.ஜ.,வைச் சேர்ந்த முன்னாள் முதல்வர் எடியூரப்பா, ம.ஜ.த., மாநில தலைவரும், மத்திய கனரக தொழிற்சாலைகள் துறை அமைச்சருமான குமாரசாமி ஆகியோர் முரசு கொட்டி பாதயாத்திரையை துவக்கி வைத்தனர்.
மத்திய அமைச்சர்கள் பிரஹலாத் ஜோஷி, சோமண்ணா, ஷோபா, பா.ஜ., மேலிட பொறுப்பாளர் ராதாமோகன் தாஸ், மாநில பா.ஜ., தலைவர் விஜயேந்திரா உட்பட இரண்டு கட்சிகளின் முக்கிய தலைவர்கள், ஏராளமான தொண்டர்கள் பாதயாத்திரையில் பங்கேற்றனர்.
வழி நெடுகிலும் முதல்வருக்கு எதிராகவும், காங்கிரஸ் அரசை கண்டித்தும் பதாகைகளை கைகளில் ஏந்தி யும், கோஷங்கள் எழுப்பியவாறும் நடந்தனர். இந்த பாதயாத்திரையை வரும் 10ம் தேதி மைசூரில் நிறைவு செய்கின்றனர்.