மைசூரு ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டலால் பீதி
மைசூரு ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டலால் பீதி
ADDED : மார் 09, 2025 11:38 PM

மைசூரு: மைசூரு ரயில் நிலையத்துக்கு, மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தார். இதனால் ரயில் நிலையத்தில் பதற்றமான சூழ்நிலை உருவானது.
மைசூரு ரயில் நிலைய அதிகாரிக்கு நேற்று காலை மர்ம நபர் ஒருவர் போன் செய்தார். 'ரயில் நிலையத்தில் வெடிகுண்டு வைத்துள்ளோம். சிறிது நேரத்தில் வெடிக்கும்' என கூறிவிட்டு தொடர்பை துண்டித்தார். அதிர்ச்சி அடைந்த அதிகாரி, உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.
அதன்பின் அங்கு வந்த மைசூரு ரயில்வே போலீசார், வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள், ரயில்வே பிளாட்பாரம், பயணியரின் லக்கேஜ்கள், ரயில் பெட்டிகள், அதே நேரத்தில் ரயில் நிலையத்துக்கு வந்த வந்தே பாரத் ரயில் உட்பட, அனைத்து இடங்களிலும் உன்னிப்பாக சோதனை நடத்தினர். எங்கும் வெடி பொருட்கள் தென்படவில்லை. இது பொய்யான மிரட்டல் என்பது தெரிந்தது.
ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்த செய்தி, காட்டுத்தீ போன்று பரவியது. பயணியர் பதற்றம் அடைந்தனர். பலரும் அங்கிருந்து வெளியேறினர்.
வெத்து மிரட்டல் என்பது தெரிந்ததும் நிம்மதி அடைந்தனர். ரயில்வே போலீசார், மிரட்டல் வந்த எண்ணை வைத்து, மர்ம நபரை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுஉள்ளனர்.