நாகசந்திரா --- மாதவரா மெட்ரோ ஆக., 6 முதல் சோதனை ஓட்டம்
நாகசந்திரா --- மாதவரா மெட்ரோ ஆக., 6 முதல் சோதனை ஓட்டம்
ADDED : ஆக 01, 2024 12:11 AM
பெங்களூரு : நாகசந்திரா- - மாதவரா இடையில் வரும் 6ம் தேதி முதல், மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் நடக்க உள்ளது.
பெங்களூரு சில்க் இன்ஸ்டிடியூட் -- நாகசந்திரா இடையில் பசுமை வழிதடத்தில் மெட்ரோ ரயில் இயக்கப்பட்டு வருகிறது.
இந்த வழித்தடத்தில் நாகசந்திராவில் இருந்து மாதவரா வரை 3.70 கி.மீ.,க்கு ரயில் பாதையை நீட்டிக்கும் பணி கடந்த 2016ல் துவங்கியது. 298 கோடி ரூபாய் செலவில் நடந்த ரயில் பாதை நீட்டிக்கும் பணியை 2019ல் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
ஆனால், நீட்டிக்கப்பட்ட ரயில் பாதையில் மாதவரா ரயில் நிலையத்தை கட்டி முடிப்பதில் ஏற்பட்ட காலதாமதம், கொரோனா ஊரடங்கு காரணத்தால், நிர்ணயிக்கப்பட்ட தேதியில், பணிகளை முடிக்க முடியவில்லை.
இந்நிலையில் நீட்டிக்கப்பட்ட ரயில் பாதையில் பணிகள் முடிந்துள்ள நிலையில், ரயில்களை இயக்க மெட்ரோ நிர்வாகம் தயாராகி வருகிறது. வரும் 6ம் தேதி சோதனை ஓட்டம் துவங்குகிறது. ஒரு மாதம் சோதனை ஓட்டம் நடக்க உள்ளது.
இந்த மாதத்தின் இரண்டாவது வாரத்தில் மெட்ரோ ரயில் பாதுகாப்பு ஆணையர் ஏ.எம்.சவுத்ரி நீட்டிக்கப்பட்ட பாதையில் பணிகளை ஆய்வு செய்கிறார்.
அடுத்த மாதம் முதல் வாரத்தில், நீட்டிக்கப்பட்ட பாதையில் மெட்ரோ ரயில் சேவை துவங்க வாய்ப்புள்ளது. ரயில் சேவை துவங்கப்பட்டால் நெலமங்களா, மாதநாயக்கனஹள்ளி பகுதிகளை சேர்ந்தவர்கள், பெங்களூரு நகருக்குள் எளிதாக வந்து செல்ல வசதியாக இருக்கும்.