நாகசந்திரா - மாதாவரா இடையே ஜூலையில் போக்குவரத்து துவக்கம்
நாகசந்திரா - மாதாவரா இடையே ஜூலையில் போக்குவரத்து துவக்கம்
ADDED : மே 13, 2024 09:41 PM
பெங்களூரு: பெங்களூரில், நாகசந்திரா - மாதாவரா இடையிலான மெட்ரோ ரயில் பாதையில், ஜூலை முதல் வாரம் ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
இதுதொடர்பாக, பெங்களூரு மெட்ரோ நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:
நாகசந்திரா - மாதாவரா இடையே, 3.7 கி.மீ., தொலைவிலான மெட்ரோ ரயில் பாதை பணிகள் முடிந்துள்ளன. ஜூலை இறுதியில் இந்த வழித்தடத்தில் போக்குவரத்து துவக்கப்படும். மெட்ரோ ரயில் போக்குவரத்து துவங்கினால், இப்பகுதி மக்களுக்கு உதவியாக இருக்கும்.
நாகசந்திரா - மாதாவரா பாதையில், மஞ்சுநாத் நகர், சிக்கபிதரகல்லு, மாதாவரா மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இப்பாதைக்கு 298 கோடி ரூபாய் செலவிடப்பட்டது. 2019லேயே பணிகள் முடிந்திருக்க வேண்டும். ஆனால் பல்வேறு பிரச்னைகளால், ஐந்து ஆண்டுகள் பணிகள் தாமதமானது.
இந்த மெட்ரோ பாதையில், அஞ்சேபாளையா உட்பட, மற்ற கிராமத்தினருக்கு வசதியாக, மொத்தம் 3 கி.மீ., சாலை அமைக்கப்பட்டுள்ளது. நாகசந்திரா - மாதாவரா இடையே, மெட்ரோ ரயில் போக்குவரத்து துவங்கினால், பெங்களூரு சர்வதேச பொருட்காட்சி மையத்துக்கு செல்லும் ஆயிரக்கணக்கான பயணியருக்கு உதவியாக இருக்கும்.
மாதநாயகனஹள்ளி, மாகளி, நெலமங்களாவில் வசிக்கும் மக்களுக்கு, இந்த மெட்ரோ பாதை பயனுள்ளதாக இருக்கும். தண்டவாளம் அமைக்கும் பணி முடிந்துவிட்டது. மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு பெயின்ட் பூசுவது, கிரானைட் கற்கள் பொருத்துவது போன்ற பணிகள் நடக்கின்றன. ஜூன் வேளையில் அனைத்து பணிகளையும் முடிக்க திட்டமிட்டுள்ளோம்.
மெட்ரோ ரயில்வே பாதுகாப்பு கமிஷனர், ஆய்வு செய்து முடித்த பின், ஜூலை இறுதியில் இப்பாதையில் வர்த்தக போக்குவரத்து துவங்கும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

