ADDED : செப் 05, 2024 05:06 AM
பல்லாரி : ராய்ச்சூர், பல்லாரி, கொப்பால். விஜயநகரா பால் கூட்டுறவு சங்கங்கள் கூட்டமைப்பில் பால் உற்பத்தி அதிகரித்துள்ளது. எனவே தெலுங்கானா மாநிலத்துக்கு விற்பனை செய்ய, பால் கூட்டுறவு சங்கங்கள் திட்டமிட்டுஉள்ளன.
இது குறித்து பால் கூட்டுறவு சங்கம் சார்பில் வெளியிட்ட அறிக்கை:
ராய்ச்சூர், பல்லாரி, விஜயநகரா, கொப்பால் மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பில், 'நந்தினி' பால் உற்பத்தி அதிகரித்துள்ளது.
கூடுதல் பாலை தெலுங்கானாவுக்கு விற்பனை செய்ய, கூட்டுறவு சங்கம் திட்டமிட்டுள்ளது. இதற்காக வாரங்கல் மாவட்டத்தில், தனியார் டெய்ரி அடையாளம் காணப்பட்டுள்ளது. அங்கு பால் அனுப்பப்படும்.
கூட்டமைப்பு எல்லைக்கு உட்பட்ட, நான்கு மாவட்டங்களில் தினமும் 2.20 லட்சம் லிட்டர் உற்பத்தியாகிறது. ராய்ச்சூரில் 25,000 லிட்டர், பல்லாரியில் 7,000 லிட்டர், கொப்பாலில் 70,000 லிட்டர், விஜயநகராவில் 1.18 லட்சம் லிட்டர் பால் உற்பத்தியாகிறது.
இங்குள்ள வாடிக்கையாளர்களுக்கு, 1.60 லட்சம் லிட்டர் பால் விற்கப்படுகிறது. மதர் டெய்ரிக்கு 10,000 லிட்டர் பால் சப்ளை செய்யப்படுகிறது.
கூடுதல் பால் தெலுங்கானாவுக்கு அனுப்பப்படும். அங்கு பாலை பதப்படுத்தி, வெவ்வேறு பிராண்டிங்கில் மார்க்கெட்டில் விற்கப்படும். இது தொடர்பாக, டெண்டர் முடிவாகியுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.