தேசிய கல்வி நிறுவனங்கள் தரவரிசை பட்டியல் சிறப்பு! 6வது முறையாக சென்னை ஐ.ஐ.டி., முதலிடம்
தேசிய கல்வி நிறுவனங்கள் தரவரிசை பட்டியல் சிறப்பு! 6வது முறையாக சென்னை ஐ.ஐ.டி., முதலிடம்
ADDED : ஆக 13, 2024 02:15 AM

புதுடில்லி, : தேசிய கல்வி நிறுவனங்கள் தரவரிசை பட்டியலில், ஒட்டுமொத்த செயல்பாட்டில் சென்னை ஐ.ஐ.டி., தொடர்ந்து ஆறாவது முறையாக முதலிடத்தைப் பிடித்துள்ளது. சிறந்த பல்கலைகள் வரிசையில், பெங்களூரு ஐ.ஐ.எஸ்.சி., தொடர்ந்து ஒன்பதாவது முறையாக முதலிடத்தைப் பிடித்துள்ளது. முதல் முறையாக சேர்க்கப்பட்டுள்ள மாநில பொது பல்கலைகளில், சென்னை அண்ணா பல்கலை தேசிய அளவில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
மத்திய கல்வி அமைச்சகம் சார்பில், உயர் கல்வி நிறுவனங்களின் தேசிய தரவரிசை பட்டியல் ஆண்டுதோறும் வெளியிடப்படுகிறது. ஒட்டுமொத்த செயல்பாடு, பல்கலைக் கழகம், கல்லுாரி, பொறியியல், நிர்வாகம், மருத்துவம், ஆராய்ச்சி, வேளாண்மை, கண்டுபிடிப்பு என, 13 பிரிவுகளில் உயர் கல்வி நிறுவனங்களின் தரவரிசை வெளியிடப்பட்டது.
கற்றல், கற்பித்தல், ஆராய்ச்சி, புதுமை நடைமுறை, மாணவர்களின் கல்வித் தரம் என, பல்வேறு காரணிகளின் அடிப்படையில் இந்த தரவரிசை தயாரிக்கப்படுகிறது. என்.ஐ.ஆர்.எப்., எனப்படும் ஒன்பதாவது தேசிய கல்வி நிறுவனங்கள் தரவரிசை பட்டியலை, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் நேற்று டில்லியில் வெளியிட்டார்.
இந்த ஆண்டு திறந்தநிலை பல்கலைகள், மாநில பொது பல்கலைகள் மற்றும் திறன் மேம்பாட்டு பல்கலைகள் ஆகிய புதிய பிரிவுகள் சேர்க்கப்பட்டுள்ளன.
கடந்த 2016ல், நான்கு பிரிவுகளுடன் இந்தப் பட்டியல் வெளியிடப்பட்டது. அப்போது, 3,565 கல்வி நிறுவனங்கள் பங்கேற்றன. தற்போது 16 பிரிவுகளில், 10,845 கல்வி நிறுவனங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.
அறிவியல் மையம்
ஒட்டுமொத்த செயல்பாடு பிரிவில், சென்னை ஐ.ஐ.டி., எனப்படும் இந்திய தொழில்நுட்ப மையம், தேசிய அளவில் தொடர்ந்து ஆறாவது முறையாக முதலிடத்தைப் பிடித்துள்ளது.
இந்த பிரிவில் முதல் 10 இடங்களில், ஏழு இடங்களை ஐ.ஐ.டி.,க்களே பெற்றுள்ளன. டில்லி எய்ம்ஸ் மற்றும் ஜவஹர்லால் நேரு பல்கலை, இந்தப் பட்டியலில் இடம் பிடித்துள்ளன. பெங்களூரு ஐ.ஐ.எஸ்.சி., எனப்படும் இந்திய அறிவியல் மையம், இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.
சிறந்த பல்கலைகள் பிரிவில், பெங்களூரு இந்திய அறிவியல் மையம் தொடர்ந்து ஒன்பதாவது முறையாக முதலிடத்தைப் பிடித்துள்ளது. டில்லியைச் சேர்ந்த ஜவஹர்லால் நேரு பல்கலை மற்றும் ஜாமியா மிலியா இஸ்லாமியா ஆகியவை அடுத்த இரண்டு இடங்களைப் பிடித்துள்ளன. தமிழகத்தின் கோவை அமிர்தா விஸ்வ வித்யாபீடம் ஏழாவது இடத்தையும், வேலுார் வி.ஐ.டி., 10வது இடத்தையும் பிடித்துள்ளன.
திருச்சி என்.ஐ.டி.,
இன்ஜினியரிங் கல்வி நிறுவனங்களில், சென்னை ஐ.ஐ.டி., தொடர்ந்து ஒன்பதாவது முறையாக முதலிடத்தைப் பிடித்துள்ளது. முதல் ஒன்பது இடங்களையும் ஐ.ஐ.டி.,க்களே பெற்றுள்ளன. தமிழகத்தின் திருச்சியில் உள்ள என்.ஐ.டி., எனப்படும் தேசிய தொழில்நுட்ப மையம், 10வது இடத்தில் உள்ளது.
நிர்வாகவியல் கல்லுாரிகள் பட்டியலில், ஆமதாபாத் ஐ.ஐ.எம்., எனப்படும் இந்திய நிர்வாகவியல் மையம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. பெங்களூரு மற்றும் கோழிக்கோடு ஐ.ஐ.எம்.,கள் அடுத்த இடங்களில் உள்ளன. மும்பை மற்றும் டில்லி ஐ.ஐ.டி.,க்கள், முதல் 10 இடங்களுக்குள் உள்ளன.
மாநில பொது பல்கலைகள் பிரிவு முதல் முறையாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில், சென்னை அண்ணா பல்கலை தேசிய அளவில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
மேற்கு வங்கத்தின் ஜாதவ்பூர் பல்கலை, மஹாராஷ்டிராவின் சாவித்ரிபாய் புலே புனே பல்கலை அதற்கடுத்த இடங்களில் உள்ளன. தமிழகத்தின் கோவை பாரதியார் பல்கலை எட்டாவது இடத்தில் உள்ளது.
தேசிய அளவிலான சிறந்த கல்லுாரிகள் பட்டியலில், டில்லியைச் சேர்ந்த ஹிந்து கல்லுாரி, மிராண்டா ஹவுஸ், செயின்ட் ஸ்டீபன்ஸ் கல்லுாரிகள் முதல் மூன்று இடங்களைப் பிடித்துள்ளன. தமிழகத்தின் கோவை பி.எஸ்.ஜி.ஆர்., கிருஷ்ணம்மாள் பெண்கள் கல்லுாரி ஏழாவது இடத்தையும், சென்னை லயோலா கல்லுாரி எட்டாவது இடத்தையும் பிடித்துள்ளன.
புதுமை கண்டுபிடிப்பு
சிறந்த ஆராய்ச்சி நிறுவனங்களில், பெங்களூரு இந்திய அறிவியல் மையம் முதலிடத்தையும், சென்னை ஐ.ஐ.டி., இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளன. இந்தப் பிரிவில் முதல் 10 இடங்களில், ஏழு இடங்களை ஐ.ஐ.டி.,க்கள் பிடித்துள்ளன.
புதுமை கண்டுபிடிப்புகள் பிரிவில், 10 நிறுவனங்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளன.
இதில், மும்பை ஐ.ஐ.டி., முதலிடத்திலும், சென்னை ஐ.ஐ.டி., இரண்டாவது இடத்திலும் உள்ளன. சென்னை அண்ணா பல்கலை 10வது இடத்தில் உள்ளது. இதில், எட்டு ஐ.ஐ.டி.,க்கள் இடம்பெற்றுள்ளன. பெங்களூரு இந்திய அறிவியல் மையம் நான்காவது இடத்தில் உள்ளது.
கோவை அமிர்தா
'ஆர்க்கிடெக்சர்' பிரிவில் உத்தரகண்டின் ரூர்க்கியில் உள்ள ஐ.ஐ.டி., முதலிடத்தைப் பிடித்துள்ளது. தமிழகத்தின் திருச்சி என்.ஐ.டி., எட்டாவது இடத்தில் உள்ளது.
சிறந்த மருத்துவக் கல்வி நிறுவனங்களில், டில்லி எய்ம்ஸ் முதலிடத்தைப் பிடித்துள்ளது. சண்டிகரின் முதுநிலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி மையம் இரண்டாவது இடத்தில் உள்ளது.
தமிழகத்தின் வேலுார் கிறிஸ்துவ மருத்துவக் கல்லுாரி மூன்றாவது இடத்தில் உள்ளது. புதுச்சேரி ஜிப்மர் ஐந்தாவது இடத்திலும், கோவை அமிர்தா விஸ்வ வித்யாபீடம் எட்டாவது இடத்திலும், சென்னை மருத்துவக் கல்லுாரி 10வது இடத்திலும் உள்ளன.
பல் மருத்துவப் பிரிவில், சென்னை சவீதா மருத்துவம் மற்றும் தொழில்நுட்ப அறிவியல் மையம் முதலிடத்தையும், கர்நாடகாவின் மணிப்பால் பல் மருத்துவ அறிவியல் கல்லுாரி இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளன.
தமிழகத்தின் சென்னை எஸ்.ஆர்.எம்., பல் மருத்துவக் கல்லுாரி ஏழாவது இடத்திலும், சென்னை ராமச்சந்திரா உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி மையம் 1-0வது இடத்திலும் உள்ளன.
பார்மசி படிப்பு பிரிவில், டில்லி ஜாமியா ஹம்தர்த் முதலிடத்தில் உள்ளது. தமிழகத்தின் ஊட்டி ஜே.எஸ்.எஸ்., பார்மசி கல்லுாரி நான்காவது இடத்தில் உள்ளது.
வேளாண்மை பிரிவில், டில்லி இந்திய வேளாண் அறிவியல் மையம் முதலிடத்திலும், ஹரியானா ஐ.சி.ஏ.ஆர்., தேசிய பால்வள ஆய்வு மையம் இரண்டாவது இடத்திலும் உள்ளன. தமிழகத்தின் கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலை ஆறாவது இடத்தில் உள்ளது.