ADDED : மே 13, 2026 11:41 PM
கேள்வி கேட்க முடியாது! வெவ்வேறு மதங்களைச் சேர்ந்திருந்தாலும், தனிநபர்களுக்கு இடையேயான உண்மையான காதலை யாராலும் கேள்வி கேட்க முடியாது. இது போல பலர் ஆர்.எஸ்.எஸ்., அமைப்பிலும் உள்ளனர். ஆனால், ஹிந்து பெண்களை கவர்ந்து செல்வதற்காக திட்டமிட்டு நடத்தப்படும், ‘லவ் ஜிஹாத்’தை ஒருபோதும் ஏற்க முடியாது. தத்தாத்ரேயா ஹொசபலே மூத்த தலைவர், ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு
கலைக்க வேண்டும்! ‘நீட்’ வினாத்தாள் கசிந்த விவகாரம் மிகவும் தீவிரமானது. இதை எளிதில் கடந்து விட முடியாது. தொடர்ச்சியாக இது போல நடக்கும் முறைகேடுகளால், தேர்வுக்கு தயாராகும் லட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படுகிறது. திறனில்லாத தேசிய தேர்வு முகமையை மத்திய அரசு உடனடியாக கலைக்க வேண்டும். பினராயி விஜயன் மூத்த தலைவர், மார்க்.கம்யூ., கட்சி
குழப்பத்தில் காங்கிரஸ்! கேரள சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாகி, 10 நாட்களாகியும் முதல்வரை தேர்ந்தெடுக்காமல் முடியாமல் காங்., திணறி வருகிறது. இது, அக்கட்சியின் தோல்வியை காட்டுகிறது. இந்த நிலைமையை பார்த்தால், கேரளாவுக்கு ஐந்து ஆண்டுகளில் ஐந்து முதல்வர்கள் கிடைத்தால் கூட ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. செஷாத் பூனாவாலா தேசிய செய்தித் தொடர்பாளர், பா.ஜ.,
