ADDED : ஜூலை 31, 2026 08:54 PM
எதையும் உருவாக்காதவர்கள்! சிறந்த கல்வியாளர்களில் ஒருவரான சென்னை ஐ.ஐ.டி., இயக்குனர் காமகோடியை, காங்கிரஸ் எம்.பி., பிரியங்கா கேலி செய்தது கண்டனத்துக்குரியது. சாதனையாளர்களை குறைத்து மதிப்பிட முயற்சிப்பவர்கள் பெரும்பாலும் எதையும் உருவாக்காதவர்களாகவே இருப்பார்கள். இதை அவர் சந்தேகத்துக்கு இடமின்றி உறுதி செய்துள்ளார். ராஜிவ் சந்திரசேகர் கேரள பா.ஜ., தலைவர்
பழிவாங்கும் செயல்! மத்திய அரசின் வாக்குறுதியை ஏற்று போராட்டத்தை கைவிட்ட மாணவர்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அவர்களை கட்டாய காவலில் வைத்து பழிவாங்கும் செயலில் அரசு ஈடுபட்டுள்ளது. மாணவர்கள் மீதான தாக்குதலுக்கு காரணமாக இருந்த மத்திய அமைச்சர் அமித் ஷா ராஜினாமா செய்ய வேண்டும். மல்லிகார்ஜுன கார்கே, தேசிய தலைவர், காங்கிரஸ்
தீர்வு காண விரும்புகிறேன்! நான் எதிர்க்கட்சியில் இருந்த போது, மக்கள் பிரச்னைகளுக்காக பார்லிமென்டில் பல முறை கேள்வி எழுப்பி உள்ளேன். இப்போது, ஆளுங்கட்சி வரிசையில் இருப்பதால், கேள்வி கேட்பதை விட, அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு காணவே விரும்புகிறேன். இதையே என் முழு பொறுப்பாக கருதுகிறேன். ராகவ் சத்தா ராஜ்யசபா எம்.பி., – பா.ஜ.,
