ADDED : செப் 05, 2024 03:59 AM

பெரிய நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் வேலை செய்வோர் வார இறுதி நாட்களில், குடும்பத்தினருடன் எந்த சுற்றுலா தலங்களுக்கு சென்று நேரத்தை செலவிடலாம் என்று, ஒரு வாரத்திற்கு முன்பே திட்டம் வகுக்க ஆரம்பித்து விடுவர்.
வார இறுதி நாட்களில் சுற்றுலா செல்ல கர்நாடகாவில் ஏராளமான சுற்றுலா தலங்கள் உள்ளன. இதில் ஒரு சில சுற்றுலா தலங்களுக்கு சென்றால் அங்கிருந்து திரும்பி வர மனதே இருக்காது. அதில் ஒன்று தான், தொட்டமாகளி.
மாண்டியாவின் மலவள்ளி டவுனில் இருந்து 5 கி.மீ., துாரத்தில் உள்ளது பீமேஸ்வரி. இதன் அருகில் அமைந்துள்ளது தொட்டமாகளி. காவிரி ஆற்றின் கரையை ஒட்டி அமைந்துள்ள இந்த இடத்தில், இயற்கை எழில் கொஞ்சுகிறது.
ஆற்றின் கரையோரம் கூடாரம் அமைத்து இங்கு நேரத்தை செலவழிக்கலாம். குடும்பத்தினருடன் மீன் பிடித்து நேரத்தை போக்கலாம். இந்த இடம் அடர்ந்த காடுகளாக இருப்பதால், வாய்ப்பு இருந்தால் ஆற்றின் எதிர் திசையில் வனவிலங்குகளை காணும் வாய்ப்பு உண்டு.
தொட்டமாகளி வனப்பகுதியில் சோலிகா என்ற ஆதிவாசி மக்கள் வசிக்கின்றனர். அவர்களை சந்திக்கும் வாய்ப்பும் கிடைக்கும். கிராமப்புற உணவுகளை ருசித்து சாப்பிடுவதற்கும் வாய்ப்பு உண்டு.
பருவ மழைக்கு பின் காவிரி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதை பார்ப்பதற்கு கண் கொள்ளா காட்சியாக இருக்கும். இங்கு எப்போது வேண்டுமானாலும் வரலாம். நுழைவு கட்டணம் இல்லை.
-- நமது நிருபர் - -