ராம பக்தர்களை தடுத்து நிறுத்திய நவீன் பட்நாயக், வி.கே.பாண்டியன்: அமித்ஷா தாக்கு
ராம பக்தர்களை தடுத்து நிறுத்திய நவீன் பட்நாயக், வி.கே.பாண்டியன்: அமித்ஷா தாக்கு
ADDED : மே 28, 2024 03:19 PM

புவனேஸ்வர்: 'ராம மஹோத்சவம்' கொண்டாடியபோது, ராம பக்தர்களை நவீன் பட்நாயக், வி.கே.பாண்டியன் தடுத்து நிறுத்தினர் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார்.
ஒடிசா மாநிலம் பத்ரக் மாவட்டத்தில் நடந்த தேர்தல் பேரணியில் அமித்ஷா பேசியதாவது; ஒடிசாவில் உள்ள 21 லோக்சபா தொகுதிகளில் 17ல் பா.ஜ., வெற்றிபெறும். சட்டசபை தேர்தலில் 147 தொகுதிகளில் 75 இடங்களில்பா.ஜ., வெற்றி பெறும். ஒடிசாவில் பா.ஜ., ஆட்சி அமைக்கும். ஜூன் 4ம் தேதிக்கு பிறகு நவீன் பட்நாயக் ஒடிசா மாநில முதல்வராக இருக்க மாட்டார். அவர் முன்னாள் முதல்வராகி விடுவார்.
இளைஞர்கள்
அரசு அதிகாரி வைத்து ஆட்சி நடத்துபவர்களை பா.ஜ.,வுக்கு ஓட்டளித்து தோல்வி அடைய செய்ய வேண்டும். ஒடிசாவில் இருந்து லட்சக்கணக்கான இளைஞர்கள் வேலை தேடி பிற மாநிலங்களுக்கு இடம்பெயர்ந்து வருகின்றனர். ஒடிசாவில் பா.ஜ., ஆட்சி அமைத்தவுடன், இளைஞர்கள் வேறு எங்கும் வேலை தேடாமல் இருக்க தொழிற்சாலைகளை உருவாக்குவோம். ஒடிசா மக்களுக்கு பிரதமர் மோடி இலவசமாக 5 கிலோ அரிசி வழங்கினார். ஆனால் பட்நாயக் தனது புகைப்படங்களுடன் சணல் பைகளில் அரிசியை விநியோகித்தார்.
ராம பக்தர்கள்
ஒட்டுமொத்த தேசமும் 'ராம மஹோத்சவம்' கொண்டாடியபோது, நவீன் பட்நாயக் மற்றும் அவரது அரசியல் வாரிசாக அறியப்படும் தமிழகத்தை சேர்ந்தவரும் (வி.கே.பாண்டியன்) ஒடிசா மக்களை கொண்டாடவிடாமல் தடுத்தனர்.
ராம பக்தர்களை தடுத்து நிறுத்தியவர்கள் ஆட்சியில் தொடரலாமா? தமிழகத்தை சேர்ந்த ஒருவர் ஒடிசா முதல்வராக வரலாமா? நரேந்திர மோடி, ஒடியா மொழி பேசும் ஒரு இளம் முதல்வரை உங்களுக்கு வழங்க இருக்கிறார். இவ்வாறு அவர் பேசினார்.