ADDED : ஜூன் 30, 2024 11:51 PM

தங்கவயல்: தங்கவயலில் நாவற்பழம் வரத்து அதிகரித்துள்ளது. ஆனால், கிலோ 200 ரூபாய்க்கு விற்கப்படுவதால், பொதுமக்கள் வாங்க தயங்குகின்றனர்.
தங்கவயல் -- பங்கார் பேட்டை சாலை ஆலமரம் முதல் பங்கார் பேட்டை வரையில் நுாற்றுக்கும் மேற்பட்ட நாவல் மரங்கள் இருந்தன. பழுத்த நாவற் பழங்கள் வழிநெடுகிலும் விழுந்து சிதறி கிடக்கும். கிருஷ்ணாபுரம், தாசரஹள்ளி சாலையில், பலர் இவற்றை எடுத்து செல்வர்.
நாட்டு வகை நாவற் பழங்கள் ஒரு கிலோ 10 ரூபாய்க்கு கிடைக்கும். ஆனால், சாலையோரங்களில் இருந்த நாவல் மரங்களை சாலை அகலப்படுத்தும் பணிக்காகவும், சிலர் வீடுகள் கட்ட இடையூறாக இருந்ததாலும், வெட்டி விட்டனர். இதனால் நாவற் பழங்களும் அரிதாகி விட்டது.
நாவற் பழம் சர்க்கரை நோய்க்கு தீர்வாகும் என்ற நாட்டு வைத்தியர்களின் அறிவுரையால் இதன் பக்கம் பலரின் பார்வை விழுந்துள்ளது.
தற்போது, ராபர்ட்சன் பேட்டை எம்.ஜி.மார்க்கெட்டுக்கு முல்பாகல், கோலார், மாலுார் மற்றும் ஆந்திராவின் குப்பம், வி.கோட்டா, ஆகிய இடங்களில் இருந்து நாவற் பழங்களை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளனர்.
இதனால், கிலோ 200 முதல் 220 ரூபாய் வரை விலை சொல்கின்றனர். எனவே பலரும், கால் கிலோ, அரை கிலோ என வாங்குகின்றனர்.