ADDED : ஜூலை 30, 2024 06:45 AM

பாலக்காடு : பாலக்காடு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நக்சல் சோமன், முதல்வர் பினராயி விஜயனுக்கு எதிராக கோஷமிட்டார்.
கேரள மாநிலம், வயநாடு பகுதியில், கடந்த, 2012ம் ஆண்டு முதல் முகாமிட்டு, நக்சல் அமைப்பின் நாடுகாணி பகுதியின் கமாண்டராக பணியாற்றி வந்தவர், வயநாடு பகுதியைச் சேர்ந்த சோமன், 58.
வயநாடு, கண்ணூர், காசர்கோடு, கோழிக்கோடு, மலப்புரம், பாலக்காடு மாவட்டங்களில் பல்வேறு சம்பவங்களில் தொடர்புள்ளதாக, இவர் மீது 76 வழக்குகள் உள்ளன. இந்நிலையில், இவரை நேற்று முன்தினம் சொரனூர் ரயில் நிலையம் அருகே, கேரளா போலீசார் கைது செய்தனர்.
தொடர்ந்து, அகளி போலீஸ் ஸ்டேஷன் பகுதிக்கு உட்பட்ட வழக்குகளில், கைது செய்யப்பட்ட சோமனை நேற்று பாலக்காடு மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்து வந்தனர்.
அப்போது, கேரள மாநில முதல்வர் பினராயி விஜனுக்கு எதிராக கோஷம் எழுப்பினார். மேற்குத் தொடர்ச்சி பகுதியில் நடந்த கொலைகளுக்கும் முதல்வர் பினராயி விஜயனுக்கும் தொடர்பு உள்ளது. அவரிடம் மக்கள் முன்னிலையில், விசாரிக்க வேண்டும்.
கார்ப்பரேட் முதலாளிகளுக்கு ஆதரவாக செயல்படும் முதல்வர் பினராயி விஜயனிடம் விசாரணை செய்ய வேண்டும் ஆகிய கோஷங்கள் எழுப்பினார்.
பலத்த போலீஸ் பாதுகாப்புடன், மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சோமனை, வரும், ஆகஸ்ட் 28ம் தேதி வரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.