7 போலீசார் பலியான வழக்கு 19 ஆண்டுக்கு பின் நக்சலைட் கைது
7 போலீசார் பலியான வழக்கு 19 ஆண்டுக்கு பின் நக்சலைட் கைது
ADDED : மே 23, 2024 10:23 PM

துமகூரு: போலீஸ் முகாம் மீது வெடிகுண்டு வீசி, ஏழு போலீஸ்காரர்களை கொன்ற வழக்கில் தலைமறைவாக இருந்த நக்சலைட், 19 ஆண்டுக்கு பின், கைது செய்யப்பட்டு உள்ளார்.
துமகூரின் பாவகடா தாலுகாவில் உள்ள வெங்கடமனஹள்ளி கிராமத்தில் கடந்த 2005 ல் பயிற்சி போலீசார், முகாம் அமைத்து தங்கி இருந்தனர்.
அந்த முகாமை சுற்றி வளைத்த நக்சலைட்கள், போலீசார் மீது துப்பாக்கி சூடு நடத்தியதுடன், வெடிகுண்டும் வீசினர். இதில் ஏழு போலீசார் கொல்லப்பட்டனர்.
பிடிவாரண்ட்
போலீசாரை அழைத்து வந்த, தனியார் பஸ் டிரைவரும் பலியானார். இந்த சம்பவம் கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்தியது.
திருமேனி போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவானது. இந்த வழக்கில் 32 நக்சலைட்களுக்கு எதிராக, ஜாமினில் வெளியே வர முடியாத, 'பிடிவாரன்ட்' பிறப்பிக்கப்பட்டது. ஆனால் அனைவரும் தலைமறைவாயினர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
உள்நாட்டு பாதுகாப்பு பிரிவு
இந்நிலையில் வழக்கில் தொடர்புடைய நக்சலைட் ஒருவர், பெங்களூரு கவுரிபாளையாவில் வசித்து வருவதாக, துமகூரு எஸ்.பி., அசோக்கிற்கு, கடந்த சில தினங்களுக்கு முன்பு தகவல் கிடைத்தது.
இதையடுத்து அசோக் தலைமையில் அமைக்கப்பட்ட ஒரு குழுவினர், பெங்களூரு வந்து அந்த நபரின் நடவடிக்கையை கண்காணித்தனர்.
நேற்று முன்தினம் இரவு, அவர் கைது செய்யப்பட்டார். விசாரணையில் அவரது பெயர் கொரட்டகெரே சங்கர், 38 என்பதும், போலீசாரை கொன்ற நக்சலைட் என்பதும் தெரிந்தது.
தற்போது பெங்களூரு மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில், டிரைவராக வேலை செய்ததும் தெரியவந்தது.
உள்நாட்டு பாதுகாப்பு பிரிவு உதவியுடன், கொரட்டகெரே சங்கர் கைது செய்யப்பட்டதாக, துமகூரு எஸ்.பி., அசோக் கூறி உள்ளார். 19 ஆண்டுக்கு பின், கொரட்டகெரே சங்கர் கைதாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.