சிறப்பு நீதிமன்றங்கள் தேவையா: மதிப்பீடு செய்ய முடிவு
சிறப்பு நீதிமன்றங்கள் தேவையா: மதிப்பீடு செய்ய முடிவு
ADDED : ஆக 20, 2024 02:22 AM

புதுடில்லி : எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் மீதான குற்றவியல் வழக்குகளை விரைவாக விசாரிக்க அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றங்களின் செயல்பாடு, செயல்திறன் மற்றும் ஒட்டு மொத்த தாக்கம் குறித்து விரிவான மதிப்பீடு செய்வற்கான பரிந்துரைகளை அளிக்கும்படி, ஐ.ஐ.எம்., - ஐ.ஐ.டி., மற்றும் சட்ட பல்கலைகள், நீதித்துறை சார்ந்த உயர் கல்வி நிறுவனங்களுக்கு மத்திய சட்ட அமைச்சகம் அழைப்பு விடுத்து உள்ளது.
கண்காணிப்பு
எம்.பி., -- எம்.எல்.ஏ.,க்கள் மீதான குற்ற வழக்குகளை விரைவாக விசாரிக்க, சிறப்பு நீதிமன்றத்தை அமைக்கும்படி உச்ச நீதிமன்றம் 2017ல் உத்தரவிட்டது. இதை தொடர்ந்து நாடு முழுதும், 12 சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டன.
டில்லியில் இரண்டு, உத்தர பிரதேசம், பீஹார், மேற்கு வங்கம், மத்திய பிரதேசம், மஹாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, தமிழகம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் தலா ஒரு சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டன.
இந்த சிறப்பு நீதிமன்றங்களின் செயல்பாடுகளை கண்காணித்து வரும் உச்ச நீதிமன்றம், பீஹார் மற்றும் கேரளாவில் உள்ள நீதிமன்றங்களின் செயல்பாடுகளை நிறுத்தும்படி 2018ல் உத்தரவிட்டது.
செயல்திறன்
உ.பி.,யில் உள்ள நீதிமன்றத்தில், 50 வழக்குகளில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளன; 1,137 வழக்குகள் நிலுவையில் உள்ளன. ம.பி., நீதிமன்றத்தில் ஐந்து வழக்குகள் தீர்த்து வைக்கப்பட்டுஉள்ளன, 319 வழக்குகள் நிலுவையில் உள்ளன.
மஹாராஷ்டிரா நீதிமன்றத்தில், 13 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டுள்ளன; 419 வழக்குகள் நிலுவையில் உள்ளன. மற்ற நீதிமன்றங்களின் வழக்கு விபரங்கள் தெரிவிக்கப்படவில்லை.
இந்நிலையில், இந்த சிறப்பு நீதிமன்றங்களின் செயல்பாடு, செயல்திறன் மற்றும் ஒட்டுமொத்த தாக்கம் குறித்து விரிவான மதிப்பீடு செய்வது தொடர்பாக பரிந்துரைகளை அளிக்கும்படி, பல்வேறு உயர் கல்வி நிறுவனங்களுக்கு மத்திய சட்ட அமைச்சகம் கோரிக்கை விடுத்துள்ளது.
ஐ.ஐ.எம்., - ஐ.ஐ.டி., சட்ட பல்கலைகள், நீதித்துறை கல்வி நிறுவனங்கள் உள்ளிட்டவற்றுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.