ADDED : ஆக 27, 2024 11:51 PM

மூணாறு : கேரள மாநிலம் மூணாறில் தனியார் தங்கும் விடுதி வளாகத்தில் காலம் தவறி நீலக்குறிஞ்சி பூக்கள் பூத்துள்ளன.
மேற்கு தொடர்ச்சி மலைகளில் கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா, கோவா ஆகிய மாநிலங்களில் ஓராண்டு முதல் 12 ஆண்டுகள் இடைவெளியில் பூக்கும் 64 வகை நீலக்குறிஞ்சி பூக்கள் உள்ளன. அவற்றில் கேரள மாநிலம் மூணாறில் மட்டும் 47 வகை குறிஞ்சி பூக்கள் உள்ளன. அதில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் 'ஸ்டெரபாலந்தஸ் குந்தியானா' எனும் தவாரவியல் பெயர் கொண்ட குறிஞ்சி பூக்கள் மிகவும் பிரசித்து பெற்றவை. அந்த வகை பூக்கள் மூணாறில் இரண்டு கட்டங்களாக பூத்து வருகின்றன.
அதன்படி 2016 ல் மாட்டுபட்டி உள்பட ஒரு சில பகுதிகளிலும் 2018 ஆகஸ்ட்டில் இரவிகுளம் தேசிய பூங்கா, சொக்கர் முடி, மறையூர் உள்பட பல பகுதிகளில் பெரும் அளவில் குறிஞ்சி பூத்தன.
இந்நிலையில் மூணாறில் சைலன்ட்வாலி ரோட்டில் உள்ள தனியார் தங்கும் விடுதி வளாகத்தில் 'ஸ்டெரபாலந்தஸ் குந்தியானா' வகை குறிஞ்சி செடிகள் வளர்த்து வருகின்றனர். அவற்றில் தற்போது காலம் தவறி பூக்கள் பூத்துள்ளன. அவற்றை விடுதி ஊழியர்கள் 'கண்களை இமை காப்பது' போன்று மிகவும் கவனமாக பாதுகாத்து வருகின்றனர்.

