நீட் தேர்வு சர்ச்சை எதிரொலி; என்.டி.ஏ., இயக்குனர் அதிரடி நீக்கம்
நீட் தேர்வு சர்ச்சை எதிரொலி; என்.டி.ஏ., இயக்குனர் அதிரடி நீக்கம்
ADDED : ஜூன் 23, 2024 05:31 AM

புதுடில்லி : இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு கடந்த மாதம் 5ல் நடந்தது. முடிவு சமீபத்தில் வெளியானது. தேர்வுக்கு முன் வினாத்தாள் வெளியானதாக குற்றச்சாட்டு எழுந்தது.
மேலும், ஒரு குறிப்பிட்ட மையத்தில் தேர்வில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக, 1,500 மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கப்பட்டது.
அதிர்வலை
உச்ச நீதிமன்ற தலையீட்டுக்கு பின் கருணை மதிப்பெண் ரத்து செய்யப்பட்டு, அவர்களுக்கு மட்டும் மறுதேர்வுக்கு உத்தரவிடப்பட்டது. இந்த விவகாரம் நாடு முழுதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இதற்கிடையே, நீட் வினாத்தாள் வெளியானது தொடர்பான வழக்கில், பீஹாரைச் சேர்ந்த நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில், வேறு மாநிலங்களை சேர்ந்தவர்களுக்கும் இதில் தொடர்பு இருப்பது தெரியவந்தது.
குறிப்பாக உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த ரவி ஆத்ரி என்ற நபருக்கு தொடர்பு இருப்பதை போலீசார் கண்டறிந்தனர். இவர், சமூக வலைதளங்களில் 'சால்வர் கேங்' என்ற பெயரில் பல்வேறு போட்டித் தேர்வுகளின் முந்தைய ஆண்டு வினாத்தாள்களையும், அதற்குரிய பதில்களையும் பதிவிட்டு பிரபலமானவர்.
கடந்த 2007ல் மருத்துவப் படிப்பில் சேர்ந்த இவர், நான்காம் ஆண்டுடன் பாதியில் தன் படிப்பை நிறுத்தியதுடன், தேர்வுகளில் ஆள்மாறாட்டம் செய்வது, அரசு நடத்தும் போட்டித் தேர்வுகளின் வினாத்தாள்களை கசிய விடுவது உள்ளிட்ட பல்வேறு மோசடிகளில் ஈடுபட துவங்கினார்.
இதன் தொடர்ச்சியாக, கடந்த 2012ல் மருத்துவ நுழைவுத்தேர்வு வினாத்தாளை வெளியிட்டதாக கூறி டில்லி போலீசார் இவரை கைது செய்தனர்.
இந்நிலையில், நீட் தேர்வுக்கான வினாத்தாள் கசிவிற்கும் ரவி ஆத்ரியே, மூளையாக செயல்பட்டது தெரியவந்துள்ளது. இதையடுத்து, உத்தர பிரதேச சிறப்பு அதிரடிப் படையின் உதவியுடன் கிரேட்டர் நொய்டாவின் நீம்கா கிராமத்தில் ரவி ஆத்ரியை சுற்றிவளைத்து கைது செய்து, தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
நீட் வினாத்தாள் ஒப்பீடு
நீட் வினாத்தாள் முறைகேடு குறித்து விசாரித்து வரும் பீஹாரின் பொருளாதார குற்றப் பிரிவு போலீசார், பாட்னாவில் உள்ள ஒரு ரகசிய வீட்டில், எரிந்த நிலையில் நீட் வினாத்தாள்களை கைப்பற்றினர்.
இது தொடர்பாக மாணவர்கள் உட்பட ஐந்துக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து, கைப்பற்றப்பட்ட வினாத்தாள்களும், தேர்வுக்கு பயன்படுத்தப்பட்ட வினாத்தாள்களும் ஒத்துப் போகின்றனவா என்பதை சரிபார்க்க, மாதிரி வினாத்தாள்களை தரும்படி, தேசிய தேர்வு முகமையிடம் பொருளாதார குற்றப் பிரிவு போலீசார் கேட்டிருந்தனர்.
இந்நிலையில் நேற்று, மாதிரி வினாத்தாள்களை தேசிய தேர்வு முகமை அதிகாரிகள் அளித்துள்ளனர். இதையடுத்து, இரு வினாத்தாள்களையும் பொருளாதார குற்றப் பிரிவு போலீசார் ஒப்பீடு செய்து வருகின்றனர்.
மேலும் இந்த முறைகேட்டில் நடந்த பண மோசடி குறித்து, அமலாக்கத் துறை விசாரணை நடத்த உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
நீட் முறைகேடு தொடர்பாக ஜார்க்கண்டில் பதுங்கியிருந்த ஆறு பேரை, பீஹார் போலீசார் நேற்று கைது செய்தனர்.