'நீட்' தேர்வு வினாத்தாள் கசிவா? உண்மையில்லை என்கிறது என்.டி.ஏ.,
'நீட்' தேர்வு வினாத்தாள் கசிவா? உண்மையில்லை என்கிறது என்.டி.ஏ.,
ADDED : மே 07, 2024 02:07 AM

புதுடில்லி, 'இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான, 'நீட்' நுழைவுத்தேர்வு வினாத்தாள் முன்கூட்டியே கசிந்ததாக கூறப்படுவது முற்றிலும் ஆதரமற்றது; எவ்வித அடிப்படையும் இல்லாதது' என, தேசிய தேர்வு முகமை விளக்கம் அளித்துள்ளது.
இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு நேற்று முன்தினம் நடந்தது. நாடு முழுதும் உள்ள 571 நகரங்களில், 4,750 மையங்கள் மற்றும் வெளிநாடுகளில் உள்ள 14 நகரங்களில் 24 லட்சம் மாணவ - மாணவியர் தேர்வு எழுதினர்.
இந்நிலையில், நீட் நுழைவுத் தேர்வின் வினாத்தாள் என்ற பெயரில், சமூக வலைதளங்களில் நேற்று முன்தினம் வினாத்தாளின் புகைப்படங்கள் பகிரப்பட்டன. இந்த செய்தி காட்டு தீ போல பரவியது.
இதை தொடர்ந்து நீட் நுழைவுத் தேர்வுக்கான வினாத்தாள் முன்கூட்டியே வெளியானதாக குற்றச்சாட்டு எழுந்தது. தேர்வில் முறைகேடு செய்ததாக பீஹார், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில், 14 பேர் கைது செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியானது.
இது குறித்து, தேர்வு களை நடத்தும் என்.டி.ஏ., எனப்படும், தேசிய தேர்வு முகமையின் மூத்த இயக்குனர் சாதனா பராசர் கூறியதாவது:
இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு வினாத்தாள் முன்கூட்டியே வெளியானதாக சமூகவலைதளங்களில் வெளியாகி இருக்கும் புகைப்படங்கள் முற்றிலும் ஆதாரமற்றது; எவ்வித அடிப்படையும் இல்லாதது. ஒவ்வொரு வினாத்தாளும் கணக்கிடப்பட்டுள்ளது.
தேர்வு துவங்கிய வினாடியில் இருந்து வெளியாட்கள் தேர்வு மையத்திற்குள் நுழைய முடியாது. மையங்கள் முழுமையாக கண்காணிப்பு கேமராவின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளன. சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ள வினாத்தாளுக்கும், உண்மையான வினாத்தாளுக்கும் தொடர்பு இல்லை.
ராஜஸ்தானில் உள்ள ஒரு தேர்வு மையத்தில் தவறான வினாத்தாள்கள் முதலில் வினியோகம் செய்யப்பட்டுள்ளன. அந்த வினாத்தாளை சில மாணவர்கள் வெளியே எடுத்து சென்றுள்ளனர்.
இதன் காரணமாக தேர்வு முறையின் நேர்மையில் சமரசம் ஏற்படவில்லை. பாதிக்கப்பட்ட 120 மாணவர்களுக்கு உடனடியாக தேர்வு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த விவகாரம் தொடர்பாக காங்., பொதுச்செயலர் பிரியங்கா கூறுகையில், ''நீட் வினாத்தாள் கசிவு குறித்து மீண்டும் செய்தி வெளியாகி உள்ளது. இதன் வாயிலாக 24 லட்சம் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. இது குறித்து பிரதமர் பதில் கூறுவாரா?'' என, கேள்வி எழுப்பினார்.
காங்கிரஸ் எம்.பி., ராகுலும் இது குறித்து விமர்சித்திருந்ததை அடுத்து, தேசிய தேர்வு முகமை இந்த விளக்கத்தை அளித்துள்ளது.