அபாய நிலையில் மரக்கிளைகள் அகற்றுவதில் மாநகராட்சி அலட்சியம்
அபாய நிலையில் மரக்கிளைகள் அகற்றுவதில் மாநகராட்சி அலட்சியம்
ADDED : ஜூலை 29, 2024 05:47 AM

பெங்களூரு ஆடி மாத காற்று, மக்களை வாட்டி வதைக்கிறது. காற்றின் வேகத்துக்கு உலர்ந்த மரங்கள் தலையில் விழுமோ என்ற அச்சத்திலேயே ரோடுகளில் செல்கின்றனர்.
பெங்களூரின் பஸ் நிலையங்கள், மார்க்கெட்டுகள், ரோடுகள் உட்பட மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடங்களில், உலர்ந்த மரங்கள் தென்படுகின்றன. மரக்கிளைகள் உலர்ந்து தொங்குவதை பல இடங்களில் காணலாம்.
மழைக்காலம் துவங்கும் முன்பே, உலர்ந்த மரங்கள், மரக்கிளைகளை அடையாளம் அகற்றியிருக்க வேண்டும். ஆனால் மாநகராட்சி அதை செய்யவில்லை.
பெங்களூரு விதான்சவுதாவில் இருந்து கூப்பிடு தொலைவிலேயே, இத்தகைய மரங்கள் உள்ளன. கிளைகள் ஒவ்வொன்றாக முறிந்து ரோடுகளில் விழுகின்றன.
தற்போது ஆடி மாதம் என்பதால், பலமான காற்று வீசுகிறது. எப்போது மரக்கிளை தலையில் விழுமோ என்ற பயத்துடன், பாதசாரிகள், வாகன பயணியர் ரோடுகளில் செல்கின்றனர்.
கிளை முறிந்து விழுந்து பொது மக்கள் காயமடைந்த சம்பவங்கள் அவ்வப்போது நடக்கின்றன. கிளைகளை அகற்றுவதில், மாநகராட்சி வனப்பிரிவு அதிகாரிகள் ஆர்வம் காண்பிக்கவில்லை.
மல்லேஸ்வரம், சம்பிகே ரோட்டில் மரக்கிளை அபாய நிலையில் காணப்படுகிறது. எந்த நேரத்திலும் ஒடிந்து விழும் நிலையில் உள்ளது.
தினமும் பல ஆயிரக்கணக்கான மக்கள் நடமாடும் ரோடுகளில் மரங்கள் அபாய நிலையில் இருந்தும், மாநகராட்சி கண்டுகொள்ளாமல் இருப்பது சரியா என, மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.