ADDED : ஏப் 14, 2024 10:47 PM

பண்டேபாளையா : திருமணம் செய்ய மறுத்ததுடன், காதலி தலையை சுவரில் முட்டிய காதலனை போலீசார் தேடுகின்றனர்.
பெங்களூரு பண்டேபாளையாவில் வசிப்பவர் ஆதித்யநாத் சிங், 28. தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறார். வீட்டின் அருகே உள்ள, 'ஜிம்'முக்கு சென்று உடற்பயிற்சி செய்து வந்தார்.
அந்த ஜிம்மிற்கு வந்த 27 வயது இளம்பெண்ணுடன், ஆதித்யநாத் சிங்கிற்கு பழக்கம் ஏற்பட்டது. பின்னர் இருவரும் காதலித்தனர். திருமணம் செய்யாமல் கடந்த ஒரு ஆண்டாக, கணவன் - மனைவி போல் வாழ்ந்தனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு, தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி, ஆதித்யநாத் சிங்கிடம், காதலி கேட்டு உள்ளார். ஆனால் அவர் திருமணத்திற்கு மறுத்து விட்டார். ஆனாலும் திருமணம் செய்யும்படி, காதலி வற்புறுத்தினார்.
கோபம் அடைந்த ஆதித்யநாத் சிங், காதலியை சரமாரியாக தாக்கினார். அவரை தலையை இழுத்து சுவரில் முட்டி காயம் ஏற்படுத்தி உள்ளார். பின்னர் தப்பி சென்று விட்டார்.
பாதிக்கப்பட்ட அப்பெண் நேற்று முன்தினம் இரவு, பண்டேபாளையா போலீசில் புகார் செய்தார்.
தலைமறைவாக உள்ள ஆதித்யநாத் சிங்கை போலீசார் தேடுகின்றனர்.

