'வெறுப்பு அரசியல் செய்ததில்லை' பா.ஜ., -- எம்.பி., சுதாகர் திட்டவட்டம்
'வெறுப்பு அரசியல் செய்ததில்லை' பா.ஜ., -- எம்.பி., சுதாகர் திட்டவட்டம்
ADDED : ஜூன் 16, 2024 07:31 AM

சிக்கபல்லாபூர்: சிக்கபல்லாபூரில் பா.ஜ., -- எம்.பி., சுதாகர் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:
லோக்சபா தேர்தல் பிரசாரத்தின்போது, தொகுதி மக்களிடம் எனக்கு அமோக வரவேற்பு இருந்தது. நிச்சயம் வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கை, ஏற்பட்டது.
நான் எதிர்பார்த்ததை விட, கூடுதல் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளேன்.
வெற்றிக்கு காரணம்
காங்கிரஸ் என் மீது சுமத்தியுள்ள அவதூறுகள், பொய்கள் தான் என் வெற்றிக்கு காரணம். என் மீது மக்கள் வைத்த நம்பிக்கையை காப்பாற்றுவது என் பொறுப்பு.
நான் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தபோது செய்த பணிகளால், சிக்கபல்லாபூர் மக்கள் என்னை ஆதரித்துள்ளனர். நமது நாட்டிற்கு வலுவான தலைமை தேவை.
நரேந்திர மோடி மூன்றாவது முறை பிரதமராக வேண்டும் என்று, நாட்டு மக்கள் முடிவு செய்தனர். தேவகவுடா, குமாரசாமி எனக்கு அளித்த ஆதரவை மறக்கவே மாட்டேன்.
முன்மாதிரி தொகுதி
சமூகம், கல்வி, பொருளாதாரம் உட்பட அனைத்து துறைகளிலும் சிக்கபல்லாபூர் நாட்டிலேயே முன்மாதிரி தொகுதியாக மாற வேண்டும் என்பது, என் ஆசை.
சிக்கபல்லாபூர் தொகுதிக்குட்பட்ட எட்டு சட்டசபை தொகுதிகளும், பெங்களூரில் இருந்து 100 கி.மீ., துாரத்தில் தான் உள்ளன. இங்கு உட்கட்டமைப்பு வசதிகளை உருவாக்கி தொழில் ஊக்குவிக்கப்பட்டால், பெங்களூருக்கு நிகராக, இங்கு புதிய நகரை உருவாக்க முடியும்.
என்னை பொருத்தவரை ஒவ்வொரு தேர்தலும் வித்தியாசமானது. ஒவ்வொரு தேர்தலிலும், ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், பல விஷயங்களை கற்றுக் கொள்ள முடியும். சட்டசபை தேர்தலில் தோற்றப் பின்னர், நான் வருத்தத்தில் இருந்தது உண்மைதான்.
பதவியில் இருக்கும்போது, நாம் செய்யும் நல்ல விஷயங்கள், ஒருநாள் நமக்கு கை கொடுக்கும் என்பதற்கு நான் எம்.பி., ஆனது தான் சாட்சி.
தொழிற்சாலைகள்
குமாரசாமி தற்போது மத்திய கனரக தொழிற்சாலைகள் துறை அமைச்சராக உள்ளார். அவரிடம் பேசி என் தொகுதியில், தொழிற்சாலைகள் கொண்டுவர முயற்சி செய்வேன்.
தேர்தல் பிரசாரத்தின்போது நான் கொடுத்த வாக்குறுதிகளை கண்டிப்பாக நிறைவேற்றுவேன். எனது அரசியல் வாழ்க்கையில், இதுவரை வெறுப்பு அரசியல் செய்ததில்லை.
அதில் எனக்கு நம்பிக்கையும் இல்லை. யார் வெறுப்பு அரசியல் செய்கின்றனர் என்று மக்களுக்கு நன்றாகவே தெரியும்.
இவ்வாறு அவர் கூறினார்.