சிறுபான்மையினருக்கு எதிராக ஒருவார்த்தைக் கூட பேசியதில்லை: பிரதமர் மோடி சொல்கிறார்!
சிறுபான்மையினருக்கு எதிராக ஒருவார்த்தைக் கூட பேசியதில்லை: பிரதமர் மோடி சொல்கிறார்!
UPDATED : மே 20, 2024 03:51 PM
ADDED : மே 20, 2024 12:07 PM

புதுடில்லி: 'சிறுபான்மையினருக்கு எதிராக இதுவரை நான் ஒருவார்த்தைக் கூட பேசியதில்லை' என பிரதமர் மோடி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
இது குறித்து பி.டி.ஐ., செய்தி நிறுவனத்திற்கு பிரதமர் மோடி அளித்த பேட்டி: அம்பேத்கர் முதல் நேரு வரை மத அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மத அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்க கூடாது. காங்கிரசின் ஓட்டு வங்கி அரசியலைத் தான், நான் எதிர்த்து வருகிறேன். சிறுபான்மையினருக்கு எதிராக நான் ஒரு வார்த்தை கூட இதுவரை பேசியதில்லை. சிறுபான்மையினருக்கு எதிராக பா.ஜ., ஒரு நாளும் செயல்பட்டதில்லை.
400 தொகுதிகள்
அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கியவர்கள் நோக்கத்தை சிதைக்கும் காங்கிரஸ் முயற்சியை மக்களிடையே நான் அம்பலப்படுத்துகிறேன். இந்த முறை தென் மாநிலங்களில் பா.ஜ., மிகப்பெரிய கட்சியாக உருவெடுக்கும். தே.ஜ., கூட்டணி 400 தொகுதிகளில் வெற்றி பெறும். தென் மாநிலங்களில் பா.ஜ., மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் அதிக தொகுதிகளில் வெல்லும்.
ஒடிசாவில் பா.ஜ., ஆட்சி
பிஜூ ஜனதா தளம் கட்சி ஆட்சியில் பூரியில் உள்ள ஜெகநாதர் கோயில் பாதுகாப்பு கேள்விகுறியாகி உள்ளது. கடந்த 6 ஆண்டுகளாக கோயில் சாவி காணவில்லை. ஒடிசாவில் கனிமங்கள் கொள்ளை நடக்கிறது. ஒடிசா மாநிலம் இயற்கை வளங்கள் நிறைந்து காணப்படுகிறது. ஆனால் அங்கு வறுமை நிலவுகிறது.
இதனை கண்டு வேதனை அடைகிறேன். ஒடிசாவில் முதன்முறையாக பா.ஜ., ஆட்சி அமைய உள்ளது. ஒடிசாவில் லோக்சபா மற்றும் சட்டசபை தேர்தலில் வெற்றி பெறுவோம். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

