தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ ராணுவ உற்பத்தி, ஏற்றுமதியில் இந்தியா புதிய சாதனை!: 'மனதின் குரல்' நிகழ்ச்சியில் பிரதமர் பெருமிதம்

ராணுவ உற்பத்தி, ஏற்றுமதியில் இந்தியா புதிய சாதனை!: 'மனதின் குரல்' நிகழ்ச்சியில் பிரதமர் பெருமிதம்

ராணுவ உற்பத்தி, ஏற்றுமதியில் இந்தியா புதிய சாதனை!: 'மனதின் குரல்' நிகழ்ச்சியில் பிரதமர் பெருமிதம்


UPDATED : ஜூலை 27, 2026 10:00 PM

ADDED : ஜூலை 26, 2026 06:52 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 27, 2026 10:00 PM ADDED : ஜூலை 26, 2026 06:52 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுடில்லி: ''ராணுவ தளவாடங்கள் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில், நம் நாடு புதிய உயரத்தை எட்டியுள்ளது. இதன் மூலம், உலக நாடுகளுக்கு நம்பகமான கூட்டாளியாக உருவெடுத்துள்ளது,'' என, பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

மாதந்தோறும் கடைசி ஞாயிறன்று, 'மன் கி பாத்' எனப்படும், 'மனதின் குரல்' நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களுடன் பிரதமர் மோடி வானொலியில் உரையாற்றி வருகிறார். அந்த வகையில், நேற்றைய நிகழ்ச்சியில் கார்கில் போரில் உயிர் தியாகம் செய்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தி, அவர்களது வீரத்தை நினைவுகூர்ந்தார்.

பிரதமர் மோடி பேசியதாவது:

கார்கில் வெற்றி தினம் நம் ஒவ்வொருவர் இதயத்திலும் பெருமிதத்தை நிறைக்கிறது. நம் முப்படைகளின் ஈடு இணையற்ற வீரம் மற்றும் தியாகத்தை இந்நாள் நினைவூட்டுகிறது. ராணுவ தளவாடங்கள் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் நம் நாடு புதிய சாதனைகளை படைத்து வருகிறது.

சமீபத்தில், நம் கடற்படையில் இணைக்கப்பட்ட ஐ.என்.எஸ்., மகேந்திரகிரி போர்க்கப்பல் முற்றிலும் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு கட்டப்பட்டது. இந்த நவீன போர்க்கப்பலில், 75 சதவீதத்திற்கும் அதிகமான பொருட்கள் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டவை. இது, 'தற்சார்பு இந்தியா'வின் வலிமைக்கு சான்று.

டி.ஆர்.டி.ஓ., எனப்படும் ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு, சமீபத்தில் நீண்ட துார வழிகாட்டு ராக்கெட், 'பினாகா' சோதனையை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளது. நம் ராணுவ விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்களின் கடினமான உழைப்பால், இந்த வெற்றி சாத்தியமாகி உள்ளது. சில தினங்களுக்கு முன், 'குஷா' என்ற ஏவுகணை சோதனையும் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

இம்மாத தொடக்கத்தில் நான் இந்தோனேஷியாவுக்கு சென்றேன். அப்போது, 'பிரம்மோஸ், அஸ்திரா' ஏவுகணைகளுக்கான முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. நம் நாட்டின் ராணுவ தளவாடங்கள் உற்பத்தி மீது, உலக நாடுகளுக்கு நாளுக்கு நாள் நம்பிக்கை அதிகரித்து வருகிறது.

தனியார் துறையில் உருவாக்கப்பட்ட நம் நாட்டின் முதல், 'விக்ரம் - 1' ராக்கெட்டும் சமீபத்தில் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. நம் இளம் விஞ்ஞானிகள், கற்பனைக்கு எட்டாத சாதனையை நிகழ்த்தி காட்டியுள்ளனர். அவர்களின் திறமை, ஆர்வம், உழைப்பு ஆகியவை நாட்டின் அறிவியல் மற்றும் விண்வெளித் துறைக்கு சர்வதேச அளவில் புதிய அங்கீகாரத்தை பெற்று கொடுத்துள்ளது.

நாட்டின் சுதந்திர தினம் வரும், 15ம் தேதி உற்சாகமாக கொண்டாடப்பட உள்ளது. வழக்கம் போல, இந்த ஆண்டும் வீடுதோறும் மூவர்ணக்கொடியை முழு மரியாதையுடன் பறக்கவிடுங்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

'மனதின் குரல்' நிகழ்ச்சியின், 100-வது அத்தியாயத்திற்கு முன், ரோதக் ஐ.ஐ.எம்., நடத்திய ஆய்வில், நாட்டில் உள்ள, 96 சதவீத பேர் இந்நிகழ்ச்சியை அறிந்துள்ளதாகவும், 100 கோடி நேயர்கள் குறைந்தது ஒரு முறையாவது இந்நிகழ்ச்சி ஒலிபரப்பை கேட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

'கதர் ஆடைகளை வாங்குங்கள்'

கைத்தறி மற்றும் கதர் ஆடைகள் குறித்து, பிரதமர் மோடி கூறியதாவது: வரும் ஆக., 7ல் தேசிய கைத்தறி நாள் கொண்டாடப்படவுள்ளது. கைத்தறி பாரம்பரியத்திற்கு நெசவாளர்களும், மகளிர் குழுக்களும் புதிய அடையாளத்தை வழங்கி வருகின்றனர். போச்சம்பள்ளி ரக புடவைகளின் அழகான பாரம்பரியத்தை சிலர் முன்னெடுத்து செல்வதால், பெண் நெசாவளர்கள் ஒருங்கிணைந்து, கம்பளி ஜவுளிகளை உருவாக்குகின்றனர். ஒருசிலர் கேரளாவின் பாரம்பரியமான கசவு புடவை கலையை பாதுகாக்கின்றனர். இதனால், நம் தாய்மார்களுக்கும், சகோதரியருக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கிறது. 12 ஆண்டுகளில், கதர் ஆடைகளின் விற்பனையும் கணிசமாக அதிகரித்துள்ளது. பண்டிகை காலங்களில், காதி விற்பனை மையத்திற்கு சென்று கதர் ஆடையோ, கைத்தறி ஆடையோ, கைவினைப் பொருட்களோ ஏதே ஒரு பொருளை கண்டிப்பாக வாங்குங்கள். இவ்வாறு அவர் கூறினார்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us