கேரள முதல்வரின் மகளுக்கு எதிராக பா.ஜ., நிர்வாகி புதிய வழக்கு
கேரள முதல்வரின் மகளுக்கு எதிராக பா.ஜ., நிர்வாகி புதிய வழக்கு
ADDED : மே 30, 2024 01:41 AM
கொச்சி, கேரள முதல்வர் பினராயி விஜயனின் மகள் வீணா, வெளிநாடுகளில் பெருந்தொகையை முதலீடு செய்துள்ளது குறித்து, விசாரணை நடத்தக் கோரி, பா.ஜ., நிர்வாகி ஒருவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
கேரளாவில் மார்க்., கம்யூ.,வைச் சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையில், இடது ஜனநாயக முன்னணி கூட்டணி அரசு அமைந்துள்ளது.
முதல்வரின் மகள் வீணா நடத்தும் தனியார் நிறுவனத்துக்கு, அரசு நிறுவனம் சார்பில் ஒப்பந்தம் கொடுக்கப்பட்டதில் முறைகேடு நடந்துள்ளதாக, ஏற்கனவே புகார்கள் உள்ளன.
இதையடுத்து, வீணாவின் நிறுவனத்தின் நடவடிக்கைகள் குறித்து, கம்பெனி சட்டத்தின் கீழும், தீவிர முறைகேடு விசாரணை அலுவலகம் வாயிலாகவும் விசாரிக்கக் கோரி, மூத்த அரசியல் தலைவர் பி.சி. ஜார்ஜின் மகனும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான ஷோன் ஜார்ஜ் உயர் நீதிமன்றத்தில் ஏற்கனவே வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்நிலையில், புதிய மனுவை அவர் தாக்கல் செய்துள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:
கடந்த, 1996ல் மாநில மின்சார துறை அமைச்சராக பினராயி விஜயன் இருந்தபோது, வட அமெரிக்க நாடான கனடாவைச் சேர்ந்த எஸ்.என்.சி., லாவாலின் என்ற நிறுவனத்துக்கு ஒப்பந்தம் அளிக்கப்பட்டது.
இதில், பல கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளது. இது தொடர்பாக விசாரித்த திருவனந்தபுரம் சிறப்பு நீதிமன்றம், 2013ல், விஜயன் உள்ளிட்டோரை விடுவித்தது. இதை, 2017ல் கேரள உயர் நீதிமன்றம் உறுதி செய்தது.
இதை எதிர்த்து, சி.பி.ஐ., சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இந்த நிலையில், வீணா மேற்காசிய நாடான அபுதாபியில் உள்ள வங்கியில் பெருந்தொகையை முதலீடு செய்துள்ளார். மேலும், கனடா நிறுவனத்தின் வாயிலாக, அமெரிக்காவில் உள்ள வங்கியிலும் முதலீடு செய்யப்பட்டுள்ளது. அந்த வங்கிக் கணக்கை வீணா பயன்படுத்தி வந்துள்ளார் என்பது தொடர்பான தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.
வீணாவின் இந்த முதலீடுகள் தொடர்பாக, உரிய விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.