ADDED : ஜூலை 06, 2024 06:12 AM

பெங்களூரு: பெங்களூரு கெம்பே கவுடா சர்வதேச விமான நிலையத்தில், 200 கோடி ரூபாய் செலவில், புதிதாக விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு கோபுரம் அமைக்க, விமான நிலைய நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
கர்நாடக மாநிலம், பெங்களூரில் இருந்து 28 கி.மீ., துாரத்தில் அமைந்துள்ளது தேவனஹள்ளி. இங்கு, 2008 மே 4ம் தேதி முதல் கெம்பே கவுடா சர்வதேச விமான நிலையம் செயல்பட்டு வருகிறது. இதை, இந்திய விமான ஆணையம் நிர்வகித்து வருகிறது.
விமான நிலைய செய்தி தொடர்பாளர் கூறியதாவது:
விமான நிலையத்தின் முதல் முனையத்தில், விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு கோபுரம் அமைந்து உள்ளது.
தினமும், 720 முதல் 730 விமான போக்கு வரத்து நடவடிக்கைகள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
வரும் நாட்களில் விமான போக்குவரத்து அதிகரிப்பதை கருத்தில் கொண்டு, பழைய கோபுரம் அருகில், 200 கோடி ரூபாய் செலவில் ஓராண்டுக்குள், புதிய கட்டுப்பாட்டு கோபுரம் அமைக்கப்படும்.
இங்கு நவீன தொடர்பு இயந்திரங்கள் வைக்கப்படும்.
இந்த கோபுரம் கட்டி முடிக்கப்பட்ட பின், விமான போக்குவரத்து கட்டுப்பாட்டில் எந்த தொந்தரவும் ஏற்படாத வகையில், நடவடிக்கை எடுக்கப்படும்.
தற்போது கட்டுப்பாட்டு கோபுரத்தில் உள்ள கருவிகளுக்கு, 10 முதல் 12 ஆண்டுகள்வரை காலக்கெடு உள்ளது. இதை ஆண்டுதோறும் பராமரித்து, விமான ஆணையத்திடம் இருந்து சான்றிதழ் பெறப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் உள்ள விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு கோபுரம்.