எல்லையில் புதிய எரிசக்தி திட்டம்; மத்திய அரசை கண்டித்து போராட்டம்
எல்லையில் புதிய எரிசக்தி திட்டம்; மத்திய அரசை கண்டித்து போராட்டம்
UPDATED : மார் 13, 2025 01:49 AM
ADDED : மார் 13, 2025 01:45 AM

புதுடில்லி : 'இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்திருப்பது, தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்' எனக்கூறி, லோக்சபாவில் இருந்து காங்கிரஸ், தி.மு.க., உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். அத்துடன், பார்லிமென்ட் வளாகத்தில் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் அமர்வு நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், லோக்சபாவில் நேற்று நடந்த கேள்வி நேரத்தின்போது காங்கிரஸ் எம்.பி., மணீஷ் திவாரி துணை கேள்வி எழுப்பினார்.
அவர் பேசியதாவது:
இந்தியா - பாகிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள பகுதியில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டத்திற்கு மத்திய அரசு சமீபத்தில் ஒப்புதல் அளித்துள்ளது.
இத்திட்டம், சர்வதேச எல்லையில் இருந்து 1 கி.மீ., தொலைவில் உள்ள குஜராத் மாநிலம் கவடாவில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால், சர்வதேச எல்லையில் இருந்து குறைந்தபட்சம் 10 கி.மீ., தொலைவுக்கு அப்பால் இது போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட வேண்டும்.
இது, தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளது. இந்த திட்டத்திற்கு மட்டும் விதிகளில் மத்திய அரசு ஏதேனும் தளர்வு அளித்துள்ளதா?
இவ்வாறு அவர் பேசினார்.
இதற்கு, பா.ஜ.,வைச் சேர்ந்த மத்திய எரிசக்தி துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி பதிலளித்து பேசுகையில், ''நம் நாட்டில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை உற்பத்தி செய்வதில் மத்திய அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.
''எனவே, அதற்குரிய உரிமங்கள், ஒப்புதல் வழங்கும் முன், சம்பந்தப்பட்ட மாநில அரசு மற்றும் அது தொடர்புடைய நிறுவனங்களின் அனுமதி முறையாக பெறப்பட்டுள்ளன,'' என்றார்.
அமைச்சர் பிரஹலாத் ஜோஷியின் பதில் திருப்தி அளிக்கவில்லை எனக்கூறிய காங்கிரஸ், தி.மு.க., உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் சபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். அதன்பின், பார்லிமென்ட் வளாகத்தில் மத்திய அரசை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.