திருமணமான 10 நாளில் மின்னல் தாக்கி புது மாப்பிள்ளை பலி
திருமணமான 10 நாளில் மின்னல் தாக்கி புது மாப்பிள்ளை பலி
ADDED : மே 05, 2024 05:49 AM

தட்சிண கன்னடா: சுப்ரமண்யாவில் திருமணமாகி பத்து நாட்களே ஆன புதுமாப்பிள்ளை, மின்னல் தாக்கி உயிரிழந்தார்.
தட்சிண கன்னடா மாவட்டம், பெல்தங்கடியின் சுப்பிரமணியாவின் பர்வதமுகி நகரை சேர்ந்தவர் சோமசுந்தர், 34. இவர், சுப்ரமண்யாவில் கார் சுத்தம் செய்யும் தொழில் செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகி பத்து நாட்கள் தான் ஆகின்றன.
நேற்று முன் தினம் இவர், வீட்டின் முன்பக்கத்தில், தேங்காய் மட்டைகளை காய வைத்திருந்தனர். மாலையில் திடீரென மழை பெய்தது. மட்டைகள் நனைவதைத் தவிர்க்க, தார்பாலினை வைத்து சோமசுந்தர் மூடிக் கொண்டிருந்தார்.
அப்போது அவர் மீது திடீரென மின்னல் தாக்கியது. படுகாயம் அடைந்த அவரை, வீட்டில் உள்ளவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். வழியில் அவர் உயிரிழந்தார்.
சோமசுந்தரின் உடலை பார்த்து அவரது மனைவி கதறி அழுதது பரிதாபமாக இருந்தது.