'இந்தியா போஸ்ட்' பெயரில் பணமோசடி சைபர் குற்றவாளிகளின் புதிய கைவரிசை
'இந்தியா போஸ்ட்' பெயரில் பணமோசடி சைபர் குற்றவாளிகளின் புதிய கைவரிசை
ADDED : செப் 17, 2024 10:15 PM
புதுடில்லி,:தபால் துறை பெயரில் நடைபெறும் பணமோசடி குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு அரசு தரப்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
வங்கி உள்ளிட்ட பல்வேறு தளங்களில் சைபர் குற்றவாளிகளின் கைவரிசை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அடுத்தகட்டமாக, தற்போது, தபால் துறை பெயரை பயன்படுத்தி சிலர் மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர்.
பார்சல் டெலிவரி செய்ய வேண்டும் என்று துவங்கி, வங்கி விபரங்கள் வரை பெற்று பணத்தை மோசடி செய்துவிடுகின்றனர்.
எப்படி நடக்கிறது மோசடி?
'இந்தியா போஸ்ட்' அலுவலகத்திலிருந்து அனுப்புவதாக முதலில் குறுஞ்செய்தி வரும். முகவரி சரியில்லாததால் பார்சல் டெலிவரி ஆகவில்லை என தெரிவிக்கப்படும். விபரங்களை பதிவிட லிங்க் இடம்பெறும். அதைத் தொடர்ந்து, தபால் அலுவலகத்தில் இருந்து பேசுவதாக அழைப்பு வரும்.
வந்துள்ள பார்சல் திருப்பியனுப்பப்படாமல் இருக்க, லிங்க்கை கிளிக் செய்து விபரங்களை பதிவிட அவசரப்படுத்தப்படும். லிங்க்கை கிளிக் செய்ததும் போலி இணைய தளத்திற்கு சென்று, 80 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை சிறிய தொகை செலுத்த கேட்கப்படும்.
அவ்வளவுதானே என நினைத்து, பணத்தை செலுத்த கிரடிட் கார்டு, டெபிட் கார்டு விபரங்களை பதிவு செய்ததும், அவை திருடப்பட்டு, சட்டவிரோத பணப்பரிமாற்றத்திற்கு 'சைபர்' குற்றவாளிகளால் பயன்படுத்தப்படும்.
அறிவுறுத்தல்
அண்மையில், ஹைதராபாதில் வசிக்கும் முன்னாள் அரசு ஊழியர் ஒருவரிடம், 26 லட்ச ரூபாய் வரை மோசடி நடைபெற்றுள்ளது.
மார்டபள்ளி என்ற இடத்தைச் சேர்ந்த 75 வயது முதியவரின் பெயரில், மும்பையில் இருந்து துபாய்க்கு பார்சல் வந்ததாகவும், அதை அவர் அனுப்பவில்லை என்றால் புகார் செய்யுமாறும் கூறி, அதன் தொடர்ச்சியாக அவரது ஆதார் உள்ளிட்ட பல்வேறு தரவுகளை பெற்று, பணமோசடி செய்துள்ளனர்.
இதையடுத்து, தபால் துறை பெயரில் வரும் குறுஞ்செய்திகள் குறித்து எச்சரிக்கையுடன் இருக்கு மாறு அறிவுறுத்தப்பட்டுஉள்ளது.
தபால் துறை, ரிசர்வ் வங்கி உட்பட அரசு அமைப்புகள் முகவரி விபரங்கள், டெபிட், கிரடிட் கார்டு விபரங்களை கேட்டு குறுஞ்செய்தியோ, அழைப்போ மேற்கொள்வதில்லை.
சந்தேகத்துக்குரிய லிங்க்குகளை கிளிக் செய்யக் கூடாது. செய்தால், தனிநபர் விபரங்கள் திருடப்படும் வாய்ப்புள்ளது. சந்தேகத்துக்குரிய லிங்க் வந்தால், அவற்றின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை நம்பகமான தேடுதல் தளம் வாயிலாக தொடர்பு கொள்ளலாம்
எதிர்பாராத குறுஞ்செய்திகள், அழைப்புகள் வந்தால் அதன் பின்னணியை ஆராய, அதிகாரப்பூர்வ வாடிக்கையாளர் சேவை மையத்தை அணுகவும்
சந்தேக குறுஞ்செய்தி, அழைப்பு வந்தால் உடனடியாக காவல் துறையில் புகார் செய்யவும். சைபர் குற்றத்தடுப்பு பிரிவிடமும் புகார் செய்யலாம்.