விமானங்கள் ரத்து விவகாரம் 'விஸ்தாரா'வுக்கு புது உத்தரவு
விமானங்கள் ரத்து விவகாரம் 'விஸ்தாரா'வுக்கு புது உத்தரவு
ADDED : ஏப் 03, 2024 12:37 AM

புதுடில்லி, பைலட்கள் மற்றும் ஊழியர்களுக்கான சம்பளம் மாற்றியமைப்பில் பிரச்னை ஏற்பட்டுள்ள நிலையில், தனியார் விமான நிறுவனமான, 'விஸ்தாரா' பல விமான சேவைகளை ரத்து செய்துள்ளது. இது தொடர்பாக, தினமும் அறிக்கைகளை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
'டாடா குழுமம்' மற்றும் 'சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்' இணைந்து உருவாக்கியது, விஸ்தாரா விமான நிறுவனம். இது, 70 விமானங்கள் வாயிலாக விமான சேவை வழங்கி வருகிறது.
இந்நிலையில், டாடா குழுமத்தின், 'ஏர் இந்தியா'வுடன், இந்த விமான நிறுவனத்தை இணைப்பது தொடர்பாக பேச்சு நடந்து வருகிறது.
பைலட் மற்றும் ஊழியர்களுக்கான சம்பளங்களை, விஸ்தாரா நிறுவனம் மாற்றியுள்ளது. இதில் உடன்பாடு ஏற்படவில்லை.
இதையடுத்து, பல பைலட்கள் மற்றும் ஊழியர்கள் திடீரென, மருத்துவ விடுப்பு எடுத்துள்ளனர்.
போதிய ஊழியர்கள் இல்லாததால், கடந்த சில நாட்களாக பல விமானங்களை, விஸ்தாரா ரத்து செய்துள்ளது. மேலும், பல விமானங்கள் தாமதமாக இயக்கப்பட்டன.
இது குறித்து பயணியர் புகார்கள் அளித்தனர். இதையடுத்து, விமான போக்குவரத்துத் துறை, இந்த விஷயத்தில் தலையிட்டுள்ளது.
பயணியருக்கு உரிய வசதிகள் கிடைப்பதை உறுதி செய்யும்படி, விஸ்தாரா நிறுவனத்துக்கு அது உத்தரவிட்டுள்ளது.
விமானங்கள் ரத்து செய்யப்பட்டால், அதற்கான மாற்று ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுஉள்ளது.
இதன் ஒரு பகுதியாக, ரத்து செய்யப்படும் விமான சேவை மற்றும் விமானங்கள் தாமதமாக இயக்கப்படுவது குறித்த அறிக்கையை தினமும் தாக்கல் செய்யும்படியும் அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையே, நேற்றும், நேற்று முன்தினமும், தலா, 50 விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாக, விஸ்தாரா கூறியுள்ளது.

