பெங்களூரில் வீடு கட்டுவோருக்கு புதிய நடைமுறை; மாநகராட்சி அனைத்து மண்டலங்களுக்கும் விஸ்தரிப்பு
பெங்களூரில் வீடு கட்டுவோருக்கு புதிய நடைமுறை; மாநகராட்சி அனைத்து மண்டலங்களுக்கும் விஸ்தரிப்பு
ADDED : செப் 03, 2024 05:54 AM
பெங்களூரு : ''வீடு கட்டுவோர், அங்கீகரிக்கப்பட்ட கட்டட வடிவமைப்பாளர்கள் அல்லது பொறியாளர்கள் மூலம் வரைபடம் தயாரித்து, ஆன்லைனில் விண்ணப்பித்து, ஒப்புதல் பெறும் புதிய நடைமுறை, பெங்களூரு மாநகராட்சியின் அனைத்து மண்டலங்களுக்கும் விஸ்தரிக்கப்படும்,'' என துணை முதல்வர் சிவகுமார் அறிவித்தார்.
பெங்களூரில் வீடுகள் கட்டுவோர், வரைபடம் தயாரித்து, மாநகராட்சியிடம் தாக்கல் செய்து, அனுமதி பெறுகின்றனர். அனுமதி கிடைத்த பின்னரே, வீடு கட்ட வேண்டும். இதில் சில மாற்றம் செய்வதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து, துணை முதல்வர் சிவகுமார், பெங்களூரில் நேற்று கூறியதாவது:
பெங்களூரில் வீடு கட்டுவோர், அங்கீகரிக்கப்பட்ட கட்டட வடிவமைப்பாளர்கள் அல்லது பொறியாளர்கள் மூலம் வரைபடம் தயாரித்து கொள்ளலாம். இதனை ஆன்லைனில் விண்ணப்பித்து, ஒப்புதல் பெற்று கொள்ளும் புதிய முறை இரண்டு மண்டலங்களில் சோதனை முறையில் கொண்டு வரப்பட்டது.
நம்பிக்கை
இந்த திட்டத்துக்கு, 'நம்பிக்கே நக்சே' எனும், 'நம்பிக்கை வரைபடம்' என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த சோதனை வெற்றி பெற்றதால், சாதக, பாதகங்களை ஆராய்ந்து, அனைத்து மண்டலங்களுக்கும் விஸ்தரிக்கப்படும். 50 சதுர அடிக்கு, 80 சதுர அடி வரை கொண்ட மனையில் வீடு கட்டுவோருக்கு இந்த நடைமுறை பொருந்தும்.
பி.டி.ஏ., மற்றும் கர்நாடக ஹவுசிங் போர்டு சார்பில் தான், அதிகபட்சமாக 50 சதுர அடிக்கு, 80 சதுர அடி வரை கொண்ட வீடுகள் கட்டுவர்.
மக்களுக்கு தொந்தரவு ஏற்பட கூடாது என்பதற்காக, இந்த நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளது.
ஆன்லைன்
அங்கீகரிக்கப்பட்ட பட்டய கணக்காளர்கள் போன்று, அங்கீகரிக்கப்பட்ட பொறியாளர்கள் அல்லது கட்டட வடிவமைப்பாளர்கள் தயாரிக்கும் வரைபடத்துக்கு, ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
மாநகராட்சி அதிகாரிகள், ஆன்லைனில் தற்காலிக அனுமதியை தருவர். பின், இடத்தை நேரில் பார்த்து முழு அனுமதியை தருவர்.
பெங்களூரில், 2,795 சாலை பள்ளங்கள் உள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளன. அனைத்தையும், 660 கோடி ரூபாயில், அடுத்த 15 நாட்களில் மூடப்பட வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
30 அடி அகலம்
மழை நீர் கால்வாய்களை சுற்றி, 50 மீட்டர் துாரத்துக்கு எந்த கட்டடமும் கட்ட கூடாது என்பது பசுமை தீர்ப்பாயத்தின் விதிமுறை. எனவே நகரின் மழை நீர் கால்வாய் பகுதிகளை சுற்றி, இரு புறமும் 30 அடி அகலம் கொண்ட சாலைகள் அமைக்கப்படும்.
இதற்காக நிலத்தை விட்டு கொடுக்கும் நில உரிமையாளர்களுக்கு, அதே அளவுக்கான நிலம் வேறு இடத்தில் வழங்கப்படும். முதல் கட்டமாக, ஹெப்பால், நாகவரா, பெல்லந்துார் சுற்று வட்டார பகுதிகளில், சில இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
அங்கு, சாலை பணிகள் ஆரம்பிக்க, 200 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த சாலையில் பஸ்கள் இயக்க வாய்ப்பில்லை. பள்ளி, கல்லுாரி வாகனங்கள், பொது மக்கள் வாகனங்கள் இயங்கலாம். இன்னும் ஒரு வாரத்தில், 5ம் கட்ட காவிரி குடிநீர் திட்டம் துவக்கப்படும்.
இவ்வாறு அவர்கூறினார்.