திருமணம், குழந்தை பேறு நல்கும் நியூ திப்பசந்திரா ஸ்ரீ பாலமுருகன்
திருமணம், குழந்தை பேறு நல்கும் நியூ திப்பசந்திரா ஸ்ரீ பாலமுருகன்
ADDED : ஜூலை 29, 2024 06:32 AM

பெங்களூரு நியூ திப்பசந்திராவின் நியூ எல்.ஐ.சி., காலனியில் அருள்மிகு ஸ்ரீ பாலமுருகன் திருக்கோவில் அமைந்துள்ளது. கடந்த 1990ல் கோவில் கட்டப்பட்டு, அப்போது ஆதிசுஞ்சனகிரி மடாதிபதியாக இருந்த பாலகங்காதரநாத சுவாமிகளால், பாலமுருகன் விக்ரஹம் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
பின், 2000ம் ஆண்டு காஞ்சி ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள், விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் முன்னிலையில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. 2015ல் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் முன்னிலையில் ராஜகோபுரம் கட்டி கும்பாபிஷேகம் நடந்தது.
ஆண்டுதோறும் ஜூன் மாதத்தில் ஆண்டு திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. கடைசியாக கடந்த மாதம் 16, 17, 18 ஆகிய நாட்களில், ஆண்டு திருவிழா, பிரதிஷ்டாபனம், கும்பாபிஷேக விழா சிறப்பான முறையில் நடத்தப்பட்டது.
கோவிலுக்குள் நுழைந்ததும், இடது புறம் விநாயகர் சன்னிதி தென்படும். அவரை தரிசனம் செய்த பின், சற்று திரும்பினால், நின்ற தோற்றத்தில் பாலமுருகன் காட்சி அளிப்பார். பார்க்க பார்க்க பரவசம் ஊட்டும். அங்கேயே இருக்க வேண்டும் என்று தோன்றும்.
பின், வலது பக்கம் திரும்பி சென்றால், கன்னிமூல கணபதி, அய்யப்ப சுவாமி, சத்யநாராயணா, மஹாலட்சுமி, ஏகாம்பரேஸ்வரர், காமாட்சி அம்மன், சரஸ்வதி, வள்ளி - தெய்வயானை சமேத சுப்பிரமணியா, பக்த ஆஞ்சநேயா, துர்கா தேவி, சுவர்ண ஆகர்ஷன பைரவா ஆகிய சுவாமிகளின் சன்னிதிகளை வரிசையாக பார்த்து தரிசிக்கலாம்.
கோவிலில் இருந்து வெளியே செல்வதற்கு முன், இடது புறத்தில் நவகிரஹங்களையும் காணலாம். அதுமட்டுமின்றி கந்த சஷ்டி கவசம், தமிழில் சுவற்றில் பொறிக்கப்பட்டுள்ளது. சிறந்த முருக பக்தர்களில் ஒருவரான கிருபானந்த வாரியார் வருகை தந்து ஆன்மிக சொற்பொழிவு ஆற்றி உள்ளார்.
இந்த கோவிலில் நடக்கின்ற கல்யாண உற்சவத்தில் பங்கேற்று, பக்தியுடன் வேண்டி கொண்டால், திருமண தடை நீங்கி, விரைவில் திருமணம் நடக்கும் என்றும்; குழந்தை இல்லாதோரின் வேண்டுதலும் நிறைவேறி இருப்பதாக பக்தர்கள் கூறுகின்றனர்.
...பாக்ஸ்...
சிறப்பு பூஜைகள்
தைப்பூசம், மஹா சிவராத்திரி, ராமநவமி, பங்குனி உத்திரம், ஆடி கிருத்திகை, திருவிளக்கு பூஜை, கந்த சஷ்டி, 10 நாட்கள் தசரா விழா, கார்த்திகை தீபம் ஆகிய பண்டிகை நாட்களை வெகு விமரிசையாக கொண்டாடப்படுகின்றன.
தினமும் காலை 6:00 மணி முதல் 11:00 மணி வரையிலும்; மாலை 5:30 மணி முதல் இரவு 8:30 மணி வரையிலும் கோவில் நடை திறந்திருக்கும்.
கூடுதல் தகவலுக்கு, 9986155168, 9448558106, 9449031837 ஆகிய மொபைல் போன் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
...பாக்ஸ்...
ஆடி கிருத்திகை விழா
ஆடி கிருத்திகையை ஒட்டி, ஜூலை 29ம் தேதி, திங்கட்கிழமை காலை 6:00 மணி முதல், 7:30 மணி வரை பால் அபிஷேகம்; 8:30 மணிக்கு ராஜ அலங்காரம், தீபாராதனை, பிரசாத விநியோகம் நடைபெறும். மாலை 6:30 மணிக்கு, ஸ்ரீ லலிதா குழுவினரின் பக்தி பாடல் இன்னிசை நிகழ்ச்சி நடைபெறும். சிறப்பு காவடி எடுத்து பக்தர்கள் வழிபடுவர்.