பதஞ்சலி வழக்கில் மருத்துவர் சங்கத்தை வறுத்த கோர்ட்
பதஞ்சலி வழக்கில் மருத்துவர் சங்கத்தை வறுத்த கோர்ட்
ADDED : மே 07, 2024 11:48 PM

புதுடில்லி, :தவறாக வழிநடத்தும் விளம்பரம் தொடர்பாக, பதஞ்சலி நிறுவனத்துக்கு எதிரான வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. வழக்கு தொடர்ந்துள்ள, இந்திய மருத்துவர் சங்கத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றம் கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளது.
யோகா குரு ராம்தேவின் பதஞ்சலி ஆயுர்வேதம் நிறுவனம், மக்களை தவறாக வழிநடத்தும் வகையில் விளம்பரங்கள் வெளியிடுவதாக, ஐ.எம்.ஏ., எனப்படும் இந்திய மருத்துவர் சங்கம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
கண்டனம்
இது தொடர்பாக ராம்தேவ், நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பாலகிருஷ்ணா ஆகியோருக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்திருந்தது.
பல நோய்களை, இந்த நிறுவனத்தின் மருந்துகளே குணப்படுத்த முடியும் என்றும், அலோபதி மருத்துவத்தால் குணப்படுத்த முடியாது என்பது போன்றும் விளம்பரங்கள் வெளியிடப்பட்டதற்கு, உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்திருந்தது.
மேலும், இது தொடர்பாக, ராம்தேவ் மற்றும் பாலகிருஷ்ணா, ஊடகங்களில் பேட்டி அளித்ததற்கும் உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துஇருந்தது.
இது தொடர்பாக, இருவரும் கேட்ட மன்னிப்பை ஏற்கவும் நீதிமன்றம் மறுத்தது. மன்னிப்பு கேட்டு பத்திரிகைகளில் விளம்பரம் அளிக்க உத்தரவிடப்பட்டது. அதை முறையாக செயல்படுத்தாதற்கும் நீதிமன்றம் கடுமை காட்டியது.
இந்நிலையில், பாலகிருஷ்ணா சார்பில் உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், 'இந்திய மருத்துவர் சங்கத் தலைவர் ஆர்.வி.அசோகன், உச்ச நீதிமன்றத்தின் சமீபத்திய உத்தரவுகள் தொடர்பாக பேட்டி அளித்துள்ளார். இது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயலாகும்' என, குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வழக்கு நீதிபதிகள் ஹீமா கோஹ்லி, அசானுதீன் அமானுல்லா அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது அமர்வு கூறியுள்ளதாவது:
உங்களுடைய மருத்துவ முறைக்கு எதிராக பொய்யான தகவல்களை கூறியுள்ளதாக பதஞ்சலி நிறுவனத்துக்கு எதிராக வழக்கு தொடர்ந்த நீங்களும், இப்போது அதையே செய்துள்ளீர்கள்.
இந்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும்போது, சங்கத்தின் தலைவர் எப்படி பேட்டி அளிக்கலாம். அதில் பல கருத்துக்களை அவர் கூறியுள்ளார். எங்களை பாராட்டி பேசியதாக கூறுகிறீர்கள்.
நாங்கள் பாராட்டுகளை எதிர்பார்ப்பதில்லை. அதுபோல, பல தேவையில்லாத விமர்சனங்களையும் சந்தித்து வருகிறோம். இவற்றையெல்லாம் தாங்கி கொள்ளும் திறன் எங்களுக்கு உள்ளது.
வாய்ப்பு
உங்களுக்கு வாய்ப்பு அளித்தோம். ஆனால், அதை வீணாக்கியுள்ளீர்கள். இனி அடுத்தது என்ன செய்வது என்பது குறித்து நாங்கள் ஆராய்வோம்.
இவ்வாறு அமர்வு கூறியுள்ளது.
சங்கத்தின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.பட்வாலியா, தன் வாதத்தின்போது கூறியுள்ளதாவது:
சங்கத் தலைவர், நீதிமன்றத்தை பாராட்டியே பேசியுள்ளார். ஆனால், நிருபர்களின் கேள்விகளில் அவர் சிக்கிக் கொண்டு தேவையில்லாததை பேசியுள்ளார்.
தன் செயலுக்கு அவர் வருத்தம் தெரிவித்துள்ளார். தான் வாயை மூடிக் கொண்டிருக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். இதை நீதிமன்றம் ஏற்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
'பதஞ்சலி சார்பில் ஊடகங்களுக்கு பேட்டி அளித்ததை தவறு என்று கூறிய நீங்கள், அதே தவறை செய்துள்ளீர்கள். அதுவும் சங்கத்தின் தலைவர். இதை எப்படி ஏற்க முடியும்' என, அமர்வு கடுமை காட்டியுள்ளது.
இதற்கிடையே, ஆயுர்வேத மற்றும் ஆயுள் பொருட்களின் விளம்பரங்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என, மத்திய ஆயுஷ் அமைச்சகம் சார்பில் மாநில அரசுகளுக்கு அனுப்பப்பட்ட சுற்றறிக்கை குறித்தும் நீதிபதிகள் நேற்று கேள்வி எழுப்பினர்.
இதையடுத்து, அந்த உத்தரவை திரும்பப் பெறுவதாக ஆயுஷ் அமைச்சகம் சார்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

