டில்லியில் புதிய வகை வைரஸ் இருமல், காய்ச்சலால் அவதி
டில்லியில் புதிய வகை வைரஸ் இருமல், காய்ச்சலால் அவதி
ADDED : பிப் 22, 2025 01:39 AM
புதுடில்லி,: டில்லியில் கடந்த சில நாட்களாக கடும் காய்ச்சல், உடல் சோர்வு, தொண்டை வலி, மூக்கடைப்பு, தலைவலி, வறட்டு இருமல் போன்ற அறிகுறிகளுடன் பலர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நோயாளிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
வழக்கமாக, 3 - 5 நாட்களில் குணமாகும் இதுபோன்ற, 'ப்ளூ' காய்ச்சல், இந்த முறை அதிக நாட்கள் நீடிப்பதாகவும் கூறப்படுகிறது.
இது குறித்து டாக்டர்கள் கூறியதாவது:
கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில், 'இன்புளூயன்ஸா - ஏ' தொற்று டில்லியில் தீவிரமாக இருந்தது. இந்தாண்டு, 'இன்புளூயன்ஸா - பி' தொற்று தீவிரமடைந்துள்ளது. 'பாராசிட்டமால்' மாத்திரை சாப்பிட்ட பின்னும் காய்ச்சல் விடுவதில்லை என, பலர் தெரிவிக்கின்றனர்.
காய்ச்சல் குணமாக வழக்கத்தை விட, 10 நாட்கள் ஆகிறது. குளிர் காலத்தில் இருந்து கோடை காலத்திற்கு மாறுவதால், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து, நுரையீரல் தொற்று ஏற்படக்கூடும்.
ரத்த அழுத்தம், நீரிழிவு நோய், நுரையீரல் மற்றும் இதய கோளாறு உள்ளோர் மட்டும் உடனடியாக சிகிச்சை மேற்கொள்வது அவசியம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

