'நியூஸ் கிளிக்' நிறுவனர் கைது செல்லாது உச்ச நீதிமன்றம் உத்தரவு
'நியூஸ் கிளிக்' நிறுவனர் கைது செல்லாது உச்ச நீதிமன்றம் உத்தரவு
ADDED : மே 16, 2024 12:31 AM

புதுடில்லி: பயங்கரவாத தடுப்பு சட்டமான, சட்டவிரோத நடவடிக்கைகள் சட்டத்தின்கீழ், 'நியூஸ் கிளிக்' என்ற இணைய செய்தி நிறுவனத்தின் நிறுவனரும், ஆசிரியருமான பிரபிர் புர்க்கயஸ்தா கைது செய்யப்பட்டது செல்லாது என்றும், அவரை உடனடியாக விடுதலை செய்யவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புதுடில்லியை தலைமையிடமாக வைத்து செயல்படும், நியூஸ்கிளிக் இணைய செய்தி நிறுவனம், நம் அண்டை நாடான சீனாவிடம் இருந்து பணம் பெற்று, நம் நாட்டுக்கு எதிராக செயல்பட்டதாக செய்திகள் வெளியாயின.
இதைத் தொடர்ந்து, டில்லியில் உள்ள அதன் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில், டில்லி போலீசார், கடந்தாண்டு அக்டோபரில் சோதனை நடத்தினர்.
இதன் தொடர்ச்சியாக, இணைய செய்தி நிறுவனத்தின் நிறுவனரும், ஆசிரியருமான பிரபிர் புர்க்கயஸ்தா மற்றும் அதன் மனிதவள மேம்பாட்டு பிரிவின் தலைவர் அமித் சக்ரவர்த்தி, கடந்தாண்டு, அக்., 3ம் தேதி கைது செய்யப்பட்டனர். இதில், அமித் சக்ரவர்த்தி அப்ரூவராக மாறினார்.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்டது மற்றும் காவலில் வைத்திருப்பதை எதிர்த்து, புர்க்கயஸ்தா தொடர்ந்த வழக்கை, டில்லி உயர் நீதிமன்றம், தள்ளுபடி செய்தது.
இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த, நீதிபதிகள் பி.ஆர்.கவாய், சந்தீப் மேத்தா அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு நேற்று உத்தரவு பிறப்பித்தது.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:
கடந்தாண்டு, அக்., 3ம் தேதி இவர் கைது செய்யப்பட்டார். அதற்கடுத்த நாள் அதிகாலையில் அவரை காவலில் எடுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால், காவலில் எடுப்பதற்கான விண்ணப்பம் மற்றும் காவலில் வைக்கும் உத்தரவு நகல்கள் அவருக்கோ, அவருடைய வழக்கறிஞருக்கோ வழங்கப்படவில்லை.
கைது செய்யப்படும்போது, அதற்கான காரணத்தை விளக்கும் வகையில், இவற்றை அளிக்க வேண்டும் என, உச்ச நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது.
அவ்வாறு தகவல்கள் தெரிவிக்காததால், புர்க்கயஸ்தாவை கைது செய்து பிறப்பித்த உத்தரவு செல்லாது. அதனால், அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். சட்டத்துக்கு உட்பட்டே செயல்பட வேண்டும்.
இந்த வழக்கில் நாங்கள் கூறியுள்ள கருத்துக்கள், இந்த வழக்குக்கு மட்டுமே பொருந்தும்.
கைது செய்யப்பட்டது செல்லாது என்பதால், அவரை விடுவிக்க எந்த நிபந்தனையும் விதிக்கத் தேவையில்லை. ஆனால், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், தகுந்த நிபந்தனைகளுடன் விடுவிப்பது தொடர்பாக, விசாரணை நீதிமன்றம் முடிவு எடுக்கலாம்.
இவ்வாறு அமர்வு கூறியது.